சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தின் ரூ.1000 கோடி ஊழல் தொடர்பாக,  ஆயிரம் கோடி அமுக்கிய #அந்த தியாகி யார்?  என அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஈரோடு, கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி, சென்னிமலை உள்பட சில பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அண்ணா திமுக சார்பில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் யார் அந்த சார் என போஸ்டர் அடித்து பேசும் பொருளாக மாறிய நிலையில், தற்போது டாஸ்மாக் ஊழலை சுட்டிக்காட்டி, யார் அந்த தியாகி என அதிமுக போஸ்டர் ஒட்டியுள்ளது மக்களிடையே பேசும் பொருளாக மாறி உள்ளது.

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச்  6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 3 நாட்கள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் மூலம்,  டாஸ்மாக் மதுபான கொள்முதல், பார் உரிமம், வாகன போக்குவரத்து, அதிகாரிகள் பணி நியமனம் உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், மதுபான சப்ளை நிறுவனங்களான, டாஸ்மாக் மதுபான சப்ளை டிஸ்டில்லரி நிறுவனங்களான  எஸ்என்ஜே., கல்ஸ், அக்கார்டு, சைப்ல், ஷிவா டிஸ்டிலரி  போன்ற மது உற்பத்தி ஆலைகள் தேவி பாட்டில்ஸ், கிறிஸ்டல் பாட்டில்ஸ், ஜிஎல்ஆர், ஏஆர் ஹோல்டிங் போன்ற பாட்டில்  நிறுவனங்களையும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  ஈரோட்டு முழுவதும்   ஆயிரம் கோடி அமுக்கிய #அந்த தியாகி யார்? என்ற போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. இது பேசும்பொருளாக மாறி உள்ளது. இந்த போஸ்டர்களை  அ.தி.மு.க., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட சார்பில் ஒட்டப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு  உள்ளத.  அந்தப் போஸ்டரில், ஆயிரம் ரூபாய் கொடுப்பதுபோல் கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?

பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல், உரிமம் பெறாத பார் மூலம் 40 ஆயிரம் கோடி ஊழல்

போன்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இதேபோல் பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது.

இதனைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.