மும்பை
பாலியல் வன்கொடுமை செய்தவரை அந்த பெண்ணை திருமணம் செய்யத் தயாரா என உச்சநீதிமன்றம் கேட்டது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மின் உற்பத்தி நிறுவனத்தில் பணி புரியும் மோகித் சுபாஷ் சவான் என்பவர் 16 வயது பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பிறகு மோகித்தின் தாய் சிறுமியின் தாயாருடன் சமாதானம் பேசி உள்ளார்.
அப்போது அவர் சிறுமியைத் தனது மகனுக்கு மணம் முடிக்க வாக்குறுதி அளித்துள்ளார். ஆயினும் அந்த சிறுமி தன்னை பலாத்காரம் செய்தவரைத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். ஆயினும் சிறுமிக்கு 18 வயது ஆன பிறகு திருமணம் செய்து கொள்ள எழுத்துப் பூர்வமாக ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. அந்த சிறுமியின் பெற்றோர் மோகித் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுள்ளனர்.
தற்போது அந்த நபர் சிறுமியைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். ஆகவே அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோகித் சார்பில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரணை செய்து வருகிறது.
அப்போது நீதிபதி போப்டே குற்றம் சாட்டப்பட்டவரிடம், “அந்தப் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்ளத் தயாரா? அவரை திருமணம் செய்து கொள்ள உங்களை கட்டாயம் செய்யவில்லை. நாங்கள் உங்கள் விருப்பத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.” எனக் கேள்வி கேட்டுள்ளார். மோகித் தமக்குத் திருமணம் ஆகி விட்டதால் அப்பெண்ணை மணம் புரிய முடியாது எனக் கூறி உள்ளார்.
உச்சநீதிமன்ற அமர்வு அந்த பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தால் உதவி செய்வதாகவும் இல்லையெனில் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்காகச் சிறை செல்லவும் அரசுப் பணியை இழக்கவும் நேரிடும் என அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது நெட்டிசன் இடையே கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
பிரபல நடிகையான டாப்சி தனது டிவிட்டரில், “யாராவது இதே கேள்வியை அந்த பெண்ணிடம் கேட்டார்களா? அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்தவனை மணக்க விரும்புவாளா? இது ஒரு கேள்வியா? அந்தப் பெண்ணுக்கு இது தீர்வா இல்லை தண்டனையா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.