சென்னை:
தமிழை நேசிப்பவர்கள் திமுகவைத் தழுவ வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், திமுகவை விட்டால் தமிழர்களுக்கு நாதியில்லை என்று தங்கத்தமிழ் செல்வன் திமுகவில் சேர்ந்தது குறித்து முன்னாள் அதிமுக, அமமுக நிர்வாகியான நாஞ்சில் சம்பத் கூறினார்.
டிடிவி தினகரன் கட்சிக்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கத்தமிழ் செல்வன் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிமுக பிரசார பீரங்கியான நாஞ்சில் சம்பத்,
தங்க தமிழ்ச்செல்வனுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறியதோடு, தமிழை நேசிப்பவர்களும் திராவிடத்தை நேசிப்பவர்களும் திமுகவைத் தழுவ வேண்டியது காலத்தின் கட்டாயம். திராவிட இயக்கத்துக்கு அறைகூவல் விடுக்கிற இக்காலத்தில், அண்ணாவை இழந்துவிட்டு நிற்கிற, டிடிவி தினகரனை விட்டு விலகி வந்தது சமயோசிதமான முடிவு என்றார்.
அதிமுகவில் இருந்துவிட்டு தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுக்கு வந்ததில் எந்த நெருடலும் இல்லை என்றவர், கள அரசியலில் இருந்தவர்களால் ஓய்வு பெறவே முடியாது. இந்த முடிவு, அவருக்கும் நல்லது; திமுகவுக்கும் நல்லது. தங்க தமிழ்ச்செல்வன் ஸ்டாலினின் தலைமையில் தொடர்ந்து இயங்கி, தேனி மாவட்ட அரசியலில் தவிர்க்கமுடியாத இடத்தை எட்டுவதற்கான வாய்ப்பும் சூழலும், தங்க தமிழ்ச்செல்வனால் திமுகவுக்கும் ஆதாயம்தான் என்றார்.
மேலும், அதிமுக பாஜகவின் கிளைக்கட்சி என்று விமர்சித்தவர், வருங்காலத்தில் அக்கட்சி இருக்கவே போவதில்லை. இதனால்தான் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுக்கு வந்திருக்கிறார். திமுகவை விட்டால் தமிழர்களுக்கு நாதியில்லை.
திமுகதான் மக்களுக்கு எதிரான எல்லாப் பிரச்சினைகளையும் கையில் எடுத்துக்கொண்டு போராடுகிறது. கூடங்குளம் அணுக்கழிவு பிரச்சினையில் இருந்து ஹைட்ரோகார்பன், மும்மொழிக் கொள்கை வரை திமுகதான் போராட்டத்தை முன்னெடுக்கிறது. ஆகவே தமிழர்கள் எல்லோரும் திமுகவைத்தான் கொண்டாடவேண்டும்.
இவ்வாறு கூறினார்.