ஹரித்துவார்:
தமிழ்புலவர் திருவள்ளுவர் சிலையை கங்கை கரையில் நிறுவ விடாமல் தடுத்து நிறுத்தி, அதை ஒரு பூங்காவில் கேட்பாரற்று போட்டிருப்பது தமிழர்களுக்கே அவமானம் என தமிழ் இன உணர்வாளர்கள் கொந்தளிக்கின்றனர்.
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று இரண்டு அடி குறளில் உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த அந்தஸ்தை கொடுத்தவர். உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’ என்று பாராட்டப்பெற்றவர். அவர் எழுதிய திருக்குறள்தான் உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ஒரே நூல். இதுவரை 80க்கு மேற்பட்ட உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் உலா வருகிறது
தமிழ் புலவர் திருவள்ளுவர் பற்றி வட இந்தியர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சி எம்.பி. தருண்விஜய் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் கங்கை கரையில் சிலையை நிறுவ ஏற்பாடு செய்தார். இதற்காக தமிழகத்தில் இருந்து 12 அடி உயர திருவள்ளுவர் சிலை தயாரிக்கப்பட்டு, ஹரித்துவார் எடுத்துச் செல்லப்பட்டது.
கடந்த மாதம் 29ந்தேதி ஹரித்துவாரில் உள்ள டாம் கோதி பகுதியில் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சிலை நிறுவும் இடம் கும்பமேளா நடக்கும் பகுதி என கூறி திருவள்ளுவர் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தால் சிலையை வைக்க முடியாமல் போனது.
இதையடுத்து சங்கராச்சாரியார் சவுக் என்ற பகுதியில் அந்த சிலையை வைக்கலாம் என உத்தரகாண்ட் முதல்–மந்திரி ஹரிஷ் ரவாத் சொன்னதின் பேரில் அங்கு நிறுவ முடிவு செய்தபோது அங்குள்ள சாமியார்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கும் சிலையை நிறுவமுடியாமல் போனது.
தற்போது திருவள்ளுவர் சிலை அங்குள்ள ஒரு பூங்காவில் கருப்பு நிற பிளாஸ்டிக் காகிதத்தால் சுற்றி கட்டப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது.
இதுகுறித்து தருண்விஜய் எம்.பி. நான் கன்னியாகுமரி முதல் ஹரித்துவார் வரை ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகிறேன். பயணம் முடிந்த பிறகு ஹரித்துவாரில் சிலையை நிறுவுவது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.
ஆனால் தமிழ் புலவர் ஒருவரின் சிலை வடமாநிலத்தில் கேட்பாரற்று கிடப்பது இங்குள்ள தமிழ் அறிஞர்களை கொதிப்படைய செய்துள்ளது. தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுத்து திருவள்ளுவர் சிலையை நிறுவ ஆவன செய்ய வேண்டும் அல்லது சிலையை கைப்பற்றி தமிழ்நாட்டுக்கு எடுத்து வரவேண்டும் என தமிழறிஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.