கொழும்பு:
இலங்கை அதிபராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய பதவி ஏற்றுள்ள நிலையில், தமிழ் மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்றும், தமிழ் மக்களின் கோரிக்கைகளை கோத்தபய ராஜபக்ஷே நிறைவேற்றுவார் என்று இலங்கை முன்னாள் விடுதலைப்புலி தலைவரும், எம்.பி.யுமான கருணா முரளிதரன் கூறி உள்ளார்.
நேற்று அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்சே, தமழ்மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று பகிரங்கமாக கூறியதைத் தொடர்ந்து, சில இடங்களில் சிங்களர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருணா, விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் வேண்டுகோளுக்கு இணங்கவே, நான் யுத்தம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று, அங்கு பிரபாகரனின் சடலத்தை அடையாளப்படுத்தினேனே தவிர அதற்கு முன் நான் ஒரு போதும் அப்பகுதிக்கு செல்லவில்லை என்றும், நான் அவ்வாறு நடந்திருக்கக்கூடாது என நினைத்து களத்திற்குச் சென்றேன். அங்கு சென்று பார்த்தேன் அவர் தான். ஆனால் அதனைக்கூட எங்களுடையவர்கள் உரிமை கோருகின்றார்கள் இல்லையே என்று வருத்தம் தெரிவித்தவர், அவர் வருவார், அவர் வருவார் என அவரை வெளி நாட்டில் விற்றுக்கொண்டே இருக்கின்றார்கள் என்று கூறினார். உலகத்திலேயே தமிழனுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவன். அதுதான் தலைவர் பிரபாகரன். வாரவன் போரவன் எல்லாம் தலைவனாகிட முடியுமா? தேசியத் தலைவருடன் நான் 30 வருடங்கள் இருந்துள்ளேன் என்று கூறியவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றது என்று கடுமையாக சாடினார்.
மஹிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்த போது சிறிலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவராக நான் இருந்தேன். இதுவரை எந்தவொரு தமிழனும் அந்த கட்சியில் பதவியில் இருந்தது இல்லை என்று கூறியவர், தான் ஏற்கனவே ராஜபக்சேவிடம் சில திட்டங்கள் குறித்து பேசியிருப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசியவர், மஹிந்த ராஜபக்சே ஆட்சியில், 12 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கி நாங்கள் விடுதலை செய்தோம். அன்றைய காலகட்டத்தில் வடக்கு கிழக்கு மக்களை கைவிட வில்லை. பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு என்று கூறியவர், தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேயும் சிறையில் உள்ள தைகதிகளை விடுவிப்பது குறித்து உறுதி வழங்கி யுள்ளார். எனவே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். சட்டச்சிக்கல் இருக்கின்றது. எனினும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அதற்கான வாய்ப்புக்கள் உள்ளது, இதனால் தமிழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
சிறிசேனா அதிபராக இருந்தேபோது, ஒரு அரசியல் கைதியைக்கூட மைத்திரி, ரணில் ஆகியோர் விடுதலை செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய கருணா, தமிழ்மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க முடியும் என்றால் ஏன் கோத்தாவிற்கு வாக்களிக்க முடியாது? என்றும் கேள்வி எழுப்பினார்.