கொழும்பு:
இலங்கை அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்று அவர் நாட்டின் 7வது அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். இலங்கையின் அனுராதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் இலங்கையின் அதிபராகப் பதவியேற்றார்.
அப்போது தமிழ்மக்கள் தனக்கு வாக்களிக்கவில்ல என்று கூறினார். இது கொழும்பில் வாழும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இலங்கை பொதுஜன பெரமுனா சாா்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான கோத்தபய ராஜபட்சே போட்டியிட்டார். அவரை எதிர்த்து, முன்னாள் அதிபா் பிரேமதாசவின் மகனான சஜித் பிரேமதாச உள்பட 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில், 52.25 சதவீத வாக்குகள் (6,924,255) பெற்று கோத்பய வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிா்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவைவிட 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அதிகமாகப் பெற்று கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றார். மற்ற வேட்பாளர்களுக்கு 5.76 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இதையடுத்து இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அனுராதபுரத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் கோத்தபய இலங்கையின் 7வது அதிபராக பதவியேற்றாா்.
அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கோத்தபய, தனக்கு வாக்களித்த சிங்கள மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியவர், சிங்களர்களின் உதவியுடன் நான் வெற்றி பெற்றுவிடுவேன் என்பதை நான் ஏற்கனவே அறிவேன் என்று தெரிவித்தவர், தனக்கு தமிழ் மக்களும் தமக்கு வாக்கு அளிப்பார்கள் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால், அவர்கள் வாக்களிக்கவில்லை, அதனால் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை.
இருந்தாலும், நான் அனைவரையும் சமமாக பார்க்கிறேன், நாட்டின் உள்ள பழைய புரதான உள்ளிட்ட அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு மதம், இனம் என்று பாராமல் எல்லா மக்களையும் ஒரேவிதமாக வழிநடத்துவேன் என்று கூறினார்.
ஊழலுக்கு எனது ஆட்சியில் இடமில்லை என்று கூறியவர், எமது நாட்டு இறையாண்மைக்கு சர்வதேசம் மதிப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நாட்டில் வாழும் அனைவருக்குமான சலுகைகள், சமாதானம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் தன்னாளான உதவிகள் அனைத்தையும் செய்வதாகவும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கும் முழு மூச்சுடன் இறங்கி செயல்படுவேன் என்றும் கூறினார்.
பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியிலேயே, தனக்கு தமிழ்மக்கள் வாக்களிக்கவில்லை என்று பேசியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.