சென்னை,
தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி உயர்நிலை தொழில்நுட்ப குழு தனது ஆய்வை நிறைவு செய்து இன்று டெல்லி சென்றது.
தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் ஆய்வு மேற்கொண்ட காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு தனது அறிக்கையை அக்டோபர் 17ந்தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும் என அக்குழுவின் தலைவர் ஜி.எஸ். ஷா தெரிவித்திருக்கிறார்.
காவிரி பாயும் பகுதிகளின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்வதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட உயர்நிலை தொழில்நுட்பக் குழுவினர் நான்கு நாட்களாக கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கர்நாடக மாநிலத்திலும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் தமிழ்நாட்டிலும் இந்தக் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அவர்கள் நேற்று ஆய்வு நடத்தினர்.
தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 14 அதிகாரிகளை கொண்ட உயர்மட்ட தொழில்நுட்ப குழுவிற்கு மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமை வகிக்கின்றார்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின்படி அமைக்கப்பட்ட, உயர்மட்ட தொழில்நுட்ப குழுவினர் தமிழகத்தில் தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.
இன்று அவர்கள் ஆய்வு மேற்கொள்ள சென்ற இடங்களில் எல்லாம், விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர் தங்கள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை அவர்களிடம் தெரிவித்தனர். தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களின் இன்றைய உண்மை நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டதாக மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தெரிவித்தார்.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இன்று தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அக்குழுவுக்கு விளக்கம் அளித்தார்.
தமிழக டெல்டா மாவட்டங்களின் இன்றைய கள நிலவரம் குறித்த ஆய்வுக்கு முன்னர், இந்தக் குழு, இரு மாநிலங்களிலும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் காவிரியில் கட்டப்பட்டுள்ள அணைப் பகுதிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சியின் பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் சந்தித்து, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை கர்நாடகம் செயல்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென இந்தக் குழுவிடம் கோரினர்.
மொத்தம் 11 இடங்களில் இந்தக் குழுவினர் ஆய்வு நடத்தினர். விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவும் உயர்நிலை தொழில்நுட்பக் குழுவைச் சந்தித்து நிலைமையை விளக்கினார்.
மேட்டூர் அணையில் நேற்று முன்தினம் ஆய்வு செய்த அந்தக் குழுவினர், அணையின் நீர் இருப்பு குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தனர்.
நேற்று ஆய்வை முடித்த இந்தக் குழுவினரை தமிழக தலைமைச் செயலர் ராம மோகன ராவை சென்னையில் சந்தித்து விவாதித்தார்.
இதற்குப் பிறகு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.எஸ். ஷா, வரும் 17ந் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தங்களது அறிக்கை சமர்ப்பிக்கப்படுமெனத் தெரிவித்தார்.
இந்த உயர்நிலை தொழில்நுடப்க் குழுவில் மத்திய நீர் வாரியத்தின் தலைவர் ஜி.எஸ். ஷா, வாரியத்தின் உறுப்பினர் மசூத் ஹுசைன், வாரியத்தின் தலைமைப் பொறியாளர் ஆர்.கே. குப்தா ஆகியோரோடு, கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர்.