டெல்லி: தமிழ்நாட்டுக்கு வெள்ளப்பாதிப்பு நிவாரணம், பயிர் காப்பீடு தொகை 7 மாதங்களாகியும் கிடைக்கவில்லை என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி எம்.பி புகார் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாதம் 17, 18 ஆம் தேதி தூத்துக்குடியில் பெய்த பெரும் மழையின் காரணமாக மாநகர் முழுவதும் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். குறிப்பாக முத்தம்மாள் காலனி, ரஹமத் நகர், தனசேகர் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, இந்திரா நகர், திரு.வி.க நகர், போன்ற பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், உப்பளமும் சேதமடைந்தது.
தூத்துக்குடி . மாவட்டம் முழுவதும் 1.42 லட்சம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதில்பெரும்பாலான விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திருந்தநிலையில், அவர்களுக்கு இதுவரை பயிர்காப்பீடு தொகையும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மக்களைவியல் தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் பேசினார். அப்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 7 மாதங்களாகியும் காப்பீட்டு தொகையை தரவில்லை என திமுக எம்.பி. கனிமொழி புகார் தெரிவித்துள்ளார்.
2023 டிசம்பரில் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு பயிர்கள் சேதமடைந்தன. எனினும் பயிர்க் காப்பீடு செய்த தூத்துக்குடி விவசாயிகளுக்கு 7 மாதங்களாகியும் இதுவரை இழப்பீட்டு தொகை வரவில்லை. பயிர்க் காப்பீடு செய்தவர்கள் இழப்பீடு பெறும் முறையை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அளவில் வறட்சியோ, வெள்ளமோ ஏற்பட்டால்தான் இழப்பீடு தரப்படும் என்ற விதியை தளர்த்தவும் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.