டில்லி,
இந்த (2018) ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், ஆதார், முத்தலாக் போன்றவை குறித்தும் பேசினார்.
அவரது உரையை தொடர்ந்து, நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வுசெய்து அறிக்கையாக வழங்கும், பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, கடந்த ஓராண்டுக்கான பொருளாதார விவரங்கள் அடங்கிய, பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தியதில், தமிழகம் முன்னோடி மாநிலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா மீண்டும் பெறும் என்றும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில் 7 முதல் 7.5 சதவீதம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுமு.
மேலும் நாட்டில் கடந்த ஓராண்டில் பல்வேறு முக்கியமான சீர் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 முதல் 7.5 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்ப்பதாகவும், இதன் காரணமாக உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா மீண்டும்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய 2017-2018ம் ஆண்டுக்கான பொருளாதார நிதி வளர்ச்சி, 6.75 சதவீதமாக இருக்கும் எனவும், இது மார்ச் மாதம் தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வது பொருளாதார வளர்ச்சியில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறியுள்ளது.
இந்தியாவின் வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய 5 மாநிலங்கள் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 70 சதவீத பங்கு வகிக்கின்றன என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதுபோல கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) செயல்படுத்து வதில் தமிழகம் முன்னோடியாக இருப்பதாகவும், அதையடுத்து, குஜராத், மகாராஷ்டிர, உத்தரப்பிரதேச மாநிலங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதில், நாட்டின் தொழில் உற்பத்தி 8 சதவீதமாக உயரும் என்றும், தொழில்துறை வளர்ச்சி 4.4 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல வேளாண் வளர்ச்சி 2.1 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.