சென்னை,
தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித் வரும் 6ந்தேதி தமிழக கவர்னராக பதவி ஏற்கிறார். அவருக்கு தமிழக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்
தமிழக கவர்னராக இருந்த ரோசையா ஓய்வுக்கு பிறகு, தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படவில்லை. மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் கவர்னர் பொறுப்பையும் கவனித்து வந்தார்.
தமிழகத்தில் நிரந்தர கவர்னர் நியமிக்கப்படாதது குறித்து அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்துவந்தனர்.
மேலும், தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக தமிழகத்திற்கு நிரந்தர கவர்னர் தேவை என்ற கோரிக்கை வலுப்பெற்று வந்தது.
இந்த நிலையில், ஓராண்டுக்குப்பிறகு, செப்டம்பர் 29-ம் தேதி புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித்தை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டார்.
தற்போது தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுனரின் பதவியேற்பு நிகழ்ச்சி வருகிற 6-ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி சென்னைக்கு வருகை தரும் பன்வாரிலால் புரோகித்தை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்க இருக்கிறார்கள்.
பின்னர் கவர்னர் மாளிகையான கிண்டி ராஜ்பவனில் நடைபெறும் விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்துகொண்டு கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.