சிறப்புக்கட்டுரை: கல்வியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (baskaranpro@gmail.com)
. மொழிப்பாடத் திட்டம் மொழிவது என்ன…?
தமிழ்நாட்டில், பிழையின்றித் தமிழ் எழுத…, வேண்டாம்… இது பேராசை.. பிழையின்றித் தமிழ் பேச முடிகிற ‘தமிழர்கள்’ எத்தனை பேர்…?
சொன்னால் சிலருக்குக் கோபம் வரும். ஆனாலும், உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்…? தமிழ் மொழிப் புலமை, இந்த அளவு தரம் தாழ்ந்து போனது, கடந்த சுமார் 50 ஆண்டுகளில்தான்.
பள்ளிக்குச் சென்று முறையான கல்வி பெறாவிட்டாலும், தவறின்றித் தமிழ் பேச, எழுதத் தெரிந்தவர்களாக இருந்தனர், முந்தைய தலைமுறையினர்.
அதெல்லாம் ஒரு காலம்.
ஆடம்பரப் பேச்சும் அலங்கார எழுத்து நடையும்தான், நல்ல தமிழுக்கான அடையாளம் என்று எப்போது (தவறுதலாக) புரிந்து கொள்ளப் பட்டதோ, அரசியல் மேடைகளும், திரையரங்குகளும், வெட்டி மன்ற நிகழ்ச்சிகளும் எப்போது தமிழ் ‘வளர்க்க’ ஆரம்பித்தனவோ, அப்போது தொடங்கியது மொழியின் வீழ்ச்சி.
’சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ – தமிழ் மொழியின் ஆகச் சிறந்த மரபு. திருக்குறள், ஆத்தி சூடி, மூதுரை…. எண்ணிப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது; மலைக்க வைக்கிறது.
பல நூறு, ஆயிரம் ஆண்டுகளாக, நம் மொழியில் விளங்கி வந்த, மிக வலிமையான தகவல் பரிமாற்ற நுட்பம் – ’நறுக்’கென்று உரைப்பது.
‘’அறிவு அற்றம் காக்கும் கருவி’’, ’’கற்றிலர் ஆயினும் கேட்க’’, ’’அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்…?’’………
”ஆறுவது சினம்”, ”ஊக்கமது கைவிடேல்”, ‘இளமையில் கல்”…..
பக்கம் பக்கமாக எழுதி, மணிக்கணக்கில் பேசி, புரிய வைக்க முடியாத வாழ்வியல் பேருண்மைகளை, ஓரிரு சொற்களில் சொல்லி விளங்க வைத்த மொழி – தமிழ் மொழி.
தொடர்ந்து பல காலமாக உயிர்ப்புடன் இருந்த, நமது அடையாளம் எப்போது தொலைந்து போனதோ, அப்போதுதான், தமிழ் மொழி, தனது ஈர்ப்பு சக்தியை இழக்கத் தொடங்கியது.
கைபேசியில் குறும் தகவல் அனுப்புகிற இளைஞர்கள், ஆங்கிலத்தில் பயன்படுத்தும் யுத்தியை, ஆதி காலத்திலேயே நமது முன்னோர்கள், மொழிச் சிதைவின்றி, செய்து காட்டி அசத்தினார்கள்.
அப்போது சாத்தியம் ஆயிற்று. இப்போது ஏன் முடியவில்லை…?
‘ஆழங்கால் பட்ட’ ஆழ்ந்த அறிவு, பொங்கிப் பெருகி வருகிற சொல்லாட்சி… இரண்டும் கலந்து, ‘மொழி மழை’ பொழிந்தது.
இன்று ஆனால், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட இளைஞர்கள் அறிந்து வைத்து இருக்கிற தமிழ்ச் சொற்கள், மிகச் சொற்பம். அதைவிடவும் அதிக எண்ணிக்கையில், ஆங்கில சொற்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். பயன்படுத்தவும் செய்கிறார்கள்.
ஆங்கிலம் பேசுதல், அறிவின் அடையாளம், நாகரிகத்தின் சின்னம் என்ற தவறாதன புரிதலை மக்கள் மத்தியில் விதைத்தவர்கள் யார்…?
யாரையும் குறை சொல்வதோ, குற்றம் காண்பதோ, நமது நோக்கமன்று. எந்தக் காரணங்களால் தமிழ்நாட்டில், தமிழர்களால், தமிழ் புறக்கணிக்கப் படுகிறதோ, அதனை கலைத் திட்டம் சரியாக அடையாளம் கண்டு இருக்கிறதா…? தமிழ் மொழியை மீட்டெடுக்க சரியான வழி கண்டு இருக்கிறதா…? ஏமாற்றமே மிஞ்சுகிறது.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்கிற பாரதியின் வாக்கு மெய்தான். உண்மையிலேயே, மிகவும் இனிமையான மொழி – நம் தமிழ் மொழி. ஆனால், அதனை எத்தனை வறண்டதாக, உயிரோட்டம் அற்றதாக மாற்ற முடியுமோ அப்படி செய்து வைத்து இருக்கிறோம்.
தமிழ் மொழி குறித்த கலைத் திட்ட வரைவை வாசிக்கிற எவருக்கும், ஏன் இத்தனை வறட்சியுடன் எழுதப் பட்டிருக்கிறது என்று நிச்சயம் தோன்றவே செய்யும். தனிப்பட்ட எவரின் தவறும் இல்லை. கடந்த ஐம்பது ஆண்டுகால, ’சினிமாத் தனமான’ மொழி நடையின் பாதிப்பு.
இனி வரும் சிறுவர்கள், தமிழ் மொழியின் இனிமையை உணரச் செய்தல் வேண்டும். மொழியின் வல்லமையை அறிந்து கொள்ளல் வேண்டும்.
இயல்பாகவே மென்மையான ஒரு மொழியில், வலிய முனைந்து செயற்கை நெடி வீசச் செய்வது, மொழிக்கு நன்மை பயப்பதாக இல்லை.
கலைத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள சில வாக்கியங்களை, அப்படியே ‘அட்சரம் பிசகாமல்’ வாசகர்களின் பாரவைக்கு….
‘குழந்தை பிறக்கும் போதே, மொழியைக் கற்றுக் கொள்வதற்கான, ‘இயல்பூக்கத்துடன்’ பிறக்கிறது. முதல் வாக்கியமே இதுதான். ‘இயல்பூக்கம்’…? பேசி முடிவுக்கு வாருங்கள்.
‘மொழி என்பது, பண்பாட்டின் கருவறை; விழுமியங்களின் சேமச் செப்பு. புரிகிறதா…? நமது தமிழ், ஒரு ‘சேமச் செப்பு’.
’தாய்மொழிக் கல்வியின் வழியாக, ‘ஒழுக்கக் கண்ணோட்டம்’ வளர்க்க முடியும்’. ஆமாம் .’ஒழுக்கக் கண்ணோட்டம்’தான்!
’தமிழின் இலக்கிய இலக்கண வழமைகளை… நவீன மயமாகும் அதன் அசைவியக்கங்களைத் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.’
‘பண்பாட்டு மரபின் தொடர்ச்சி’ ஆகியவற்றை மேமப்டுத்துவதற்கான கற்பித்தல்… பற்றியும் சொல்லப் பட்டு இருக்கிறது. பண்பாடு, மரபு, தொடர்ச்சி ஆகியவற்றின் நுட்பமான வேறுபாடுகள் அற்இந்தவர்கள் மட்டும் புரிந்து கொண்டால் போதும்.
பாமரர்கள் படித்து, கேட்டு, பிரமித்துப் போய் நிற்க வேண்டும். அப்படித்தான் ஒரு மொழியை வளர்க்க முடியும். என்ன சிந்தனை இது…?
‘பாட நூல்கள், மேல் அட்டை தொடங்கி பின்னட்டை வரை, கவர்ச்சியும் அழகும் உறுதியான கட்டமைப்பும் கொண்டிருப்பதோடு, நம்பகத்தன்மையும் நுண்ணிய திறன் வளர்க்கும் ‘இயங்காற்றல்’ உடைய கருவியாகவும் அமைய வேண்டும்’ என்று ஆய்வு நூல் ஒன்றை மேற்கோள் காட்டுகிறது கலைத் திட்டம்.
”கவர்ச்சியும் அழகும் கொண்டு, ‘இயங்காற்றல் உடைய கருவியாக’ பாட நூல் அமைய வேண்டும்”.
இப்படி எல்லாம் ஆய்வு செய்து கண்டுபிடிக்கவும், அதனை மேற்கோள் காட்டவும் தெரியாதவர்கள் வடிவமைத்த பாட நூல்களைப் படித்ததனால்தான் நாம் எல்லாம் ‘இப்படி’ இருக்கிறோம். என்ன செய்வது…?
எல்லாமே மோசமாகத்தான் இருக்கிறதா…? இல்லை. மிக நிச்சயமாக இல்லை. பல மிக நல்ல முயற்சிகளுக்கும் வழி காணப் பட்டு இருக்கிறது. அதேபோல, ’கொள்ளிக் கட்டையால் சொறிந்து கொள்கிற’ ‘சோதனைகள்’ இருக்கவே செய்கின்றன.
இரண்டையும் பார்த்து விடலாமா…?
(வளரும்)