சென்னை,
விவசாயிகளை காப்பாற்ற முன்வராத தமிழக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் இயக்குனர் அமீர் காட்டமாக பேசினார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சேப்பாக்கத்தில் இளைஞர்கள் கலந்துகொண்ட உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் வறட்சியின் காரணமாக பயிர்கள் கருகியதால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்து உள்ளனர். இதில் பலர் தற்கொலை செய்து கொண்டும், பயிர்களை காய்ந்து போவதை கண்டு மாரடைப்பாலும் மரணமடைந்தும் உள்ளனர்.
விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க கோரியும், அரசை கண்டித்தும் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் தமிழ் திரைப்பட இயக்குநர் அமீர், நடிகர் மன்சூர் அலிகான் போன்றோர் பங்கேற்றனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு இயக்குநர் அமீர் பேசியதாவது,
விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் இந்தப் போராட்டத்தை ஒரு சிறுபொறியாக நான் பார்க்கிறேன். இது இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது. முழுவதுமாக வெற்றி அடைந்து விட்டோம் என்று சொல்ல முடியாது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள அவல நிலை இது. ஒரு உழவனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான போராட்டமாக இது உள்ளது. இப்படி ஒரு போராட்டத்தை இளைஞர்கள் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
விவசாயிகள் தற்கொலைக்கு பொறுப்பேற்று அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.
விவசாயிகளை காப்பாற்றாத அரசு கலைக்கப்பட வேண்டும். மக்களுக்கான ஆட்சி இங்கு உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அத்தனை எம்பிகள், எம்எல்ஏக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.
ஜாதிப் பிரச்சனை, மதப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று விவசாயிகள் பிரச்சனைக்கும் முகம் கொடுக்க வேண்டும்.
வேளாண்மைதான் முதன் பிரச்சனை என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
விவசாயிகளின் பிரச்சனை இப்படியே போனால் இந்தியா இன்னும் கொஞ்சம் நாட்களில் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை வரும்.
இவ்வாறு இயக்குனர் அமீர் பேசினார்.
சமூக வலைதளங்கள் மூலம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கும், விவசாயிகள் தற்கொலை தடுப்பு உண்ணாவிரதத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை படித்த இளைஞர்கள் பட்டாளம் இந்த போராட்டங்களில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் சென்னை நோக்கி திரண்டு வந்தனர்.
ஜல்லிக்கட்டு ஆதரவாக பேரணி நடத்திய இளைஞர்களும் விவசாயி தற்கொலைக்காக உண்ணா விரதம் இருந்த சேப்பாக்கத்தில் அவர்களுடன் இணைந்தனர். இதன் காரணமாக சேப்பாக்கம் முழுவதும் இளைஞர் பட்டாளமாகவே காட்சி அளித்தது.
போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாபப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்.