சென்னை:

மாந்தோப்பில் இருக்கிறது என்பதற்காக பலா மரத்தை, மாமரம் என்று ஏற்கமுடியுமா. அது போலத்தான் ரஜினி தமிழ்நாட்டில் வாழ்கிறார் என்பதற்காக அவரை தமிழராக ஏற்க முடியாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்ததாவது:

“ரஜினிகாந்த் தான் ஒரு பச்சைத்தமிழன் என்பதை கர்நாடகாவிலோ, மராட்டியத்திலோ போய் பதிவு செய்வாரா? ரஜினியை தமிழராக ஏன் ஏற்க முடியாது என்கிறார்கள் சிலர். மாந்தோப்பில் இருக்கிறது என்பதற்காக பலாமரத்தை மாமரமாக ஏற்க முடியுமா.

ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் வசிக்கிறார் என்பதற்காக தமிழராக ஏற்க முடியாது. நல்லவர் என்பதற்காக வெள்ளைக்காரரை நாட்டை ஆள விட முடியுமா?

நல்லவர் கெட்டவர் என்பது இங்கே விசயமில்லை..உரிமைதான் முக்கியம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்கிறார்கள். ஆனால் சோனியா காந்தியை ஆள விடவில்லையே.

ரஜினி நல்லவர் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். எதை வைத்து ரஜினியை நல்லவர் என்று கூறுகிறீர்கள். துயரப்படும் மக்களின் கண்ணீரை துடைக்க கை நீட்டவே இல்லை. அவர் எந்த ஒரு விசயத்திற்காகவும் தமிழக மக்களுக்காக போராடவில்லை. குறைந்தபட்சம் குரல் கொடுக்கக் கூட இல்லை.

பிரச்சினைகளுக்கு போராடாமல் தேர்தலில் நிற்கலாமா? மீனவர்களின் துயரத்தில் பங்கேற்கவில்லை. ஆந்திராவில் மரம் வெட்டியவர்களை சுட்டுக்கொன்ற போதும் குரல் கொடுக்கவில்லை. வலியை உணராத நபர் எப்படி வழி நடத்த முடியும்.

தவிர ரஜினிக்கு தமிழர்கள் பண்பாடு தெரியுமா? தமிழின் தொன்மை, ஆழம், கலை, இலக்கிய பண்பாடு, வரலாறு பற்றி எதுவும் அறியாதவர் ரஜினி. மூவேந்தர்கள் பற்றி தெரியாதவர். இப்படி தமிழர்களின் வரலாறு பற்றி எதுவுமே தெரியாதவர் எப்படி எங்களை வழி நடத்த முடியும்.

அதுமட்டுமல்ல. கொள்ளையை கேட்டாங்க ஆடிப்போயிட்டேன் என்கிறார். கொள்கைதான் வழி நடத்த முடியுமே தவிர, தனி மனித புகழ் வெளிச்சம் எப்படி வழி நடத்த முடியும்” என்று பேசினார் சீமான்.