சென்னை: கடந்த 7மாதங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று பெருமிதமாக கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் உள்ளது என கூறினார்.
திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் பயனாளிக்கு தமிழக முதல்வர் மருந்து பெட்டகம் வழங்க உள்ளதை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதற்காக அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமான மூலம் திருச்சி சென்றடைந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் உள்ளதாகவும், கடந்த 7 மாதங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாகவும் கூறினார்.
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மரபணு சோதனை ஆய்வகம் மூலம் கொரோனா மரபணு மாற்றம் குறித்து கண்காணித்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஆல்பா, ஒமைக்ரான் என 10-க்கும் மேற்பட்ட மரபணு மாற்றமடைந்த கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால், தற்போது பரவி வரும் மரபணு மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் இதுதொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.