சென்னை: தமிழக அரசு செய்துவரும் தாமதத்தால் ‘புகழ்பெற்ற கல்வி நிறுவனம்’ என்ற அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கழகம் பெறுமா? என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய மனிதவளத்துறை அமைச்சகம், தமிழக அரசு பங்களிக்க வாய்ப்புள்ள நிதி குறித்து தகவலை ஒருவாரத்திற்குள் தெரிவிக்குமாறு கடிதம் எழுதி இதுவரை 6 வாரங்கள் ஆகியும் தமிழக அரசின் சார்பிலிருந்து இதுவரை பதில் அனுப்பப்படவேயில்லை.
தமிழக அரசு இந்த விஷயத்தில் இன்னும் தாமதம் செய்யுமானால், இந்த முக்கியமான அந்தஸ்தானது, பிற மாநிலங்களின் பல்கலைக்கழகங்கள் அல்லது மத்தியப் பல்கலைகளுக்குச் சென்றுவிடும் நிலை உள்ளது.
இந்த அந்தஸ்து அண்ணா பல்கலைக்கு கிடைத்தால், அக்கல்வி நிறுவனத்திற்கு ரூ.1000 கோடிவரை நிதியுதவி கிடைப்பதோடு, புதிய படிப்புகளைத் தொடங்குதல் மற்றும் வெளிநாட்டு மாணாக்கர்களை சேர்த்துக் கொள்ளும் விஷயங்களில் முழு சுதந்திரம் கிடைக்கும்.
சர்வதேச கல்வி நிறுவனமாக பரிணமிக்கும் பொருட்டு, மத்திய மனிதவள அமைச்சகத்திடமிருந்து ரூ.2500 கோடி நிதியுதவியைக் கேட்டிருந்தது அண்ணா பல்கலை. அந்த முன்மொழிவைப் பார்த்தப் பிறகு, மத்திய அமைச்சகத்தின் நிபுணர் குழுவினர், அண்ணா பல்கலையை புகழ்பெற்ற கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கான கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக தேர்வுசெய்தது.