சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பாலங்களை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து அரசாணை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள 9, 479 பாலங்களை ஆய்வு செய்து, அதில் பழுது நீக்கவும், நெடுஞ்சாலைத்துறை பணியிடங்கள் குறித்து ஆராயவும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு கூறி உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நிபுணத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களைக் கொண்ட ‘பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு’ உருவாக்கப்படும் என என சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள 9479 பாலங்களை ஆய்வு செய்து உறுதித்தன்மையை கண்டறிந்து பழுதுகள் நீக்க ‘பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு’ உருவாக்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், நெடுஞ்சாலைத் துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யவும் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த குழு, நெடுஞ்சாலை துறையின் கீழ் கட்டப்பட்ட பாலங்களை ஆய்வு செய்து பழுது ஏற்பட்டு இருப்பின் அதனை உடனுக்குடன் சீரமைக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இந்தக் குழுவில் நெடுஞ்சாலை துறை இயக்குனர் செல்வதுரை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ், சாலை மேம்பாட்டு நிறுவன தலைமை மேலாளர் பழனிவேல், கண்காணிப்பு பொறியாளர் ஆர். கிருஷ்ணசாமி, தேசிய நெடுஞ்சாலை துணைத் தலைமை பொறியாளர் சிவகுமார் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.