ஐதராபாத்:
ஆவணங்கள் திருப்திகரமாக இல்லாததால் தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி எம்எல்ஏ.வும், தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவின் மருமகனுமான சென்னமனேனி ரமேஷ் பாபு இந்திய குடிமகனாகும் தகுதியில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரமேஷ் பாபு தெலங்கானா மாநிலம் வேமுலவாடா தொகுதி எம்எல்ஏ. இவர் இந்திய குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணத்தால் இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில கவனர்னரும், தமிழகத்தில் பொறுப்பு கவர்னருமான வித்யாசாகர் ராவின் சகோதரி மகன் தான் ரமேஷ்பாபு. அதோடு இவர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் உறவினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கடந்த மாதம் 28ம் தேதி நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின் படி மத்திய உள்துறை இந்த கடிதத்ததை அனுப்பியுள்ளது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மேல் முறையீடு செய்யவுள்ளேன் என்று ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், ‘‘ மக்கள் பிரச்னையில் என்னை எதிர்க்க முடியாதவர்கள் தான் இதுபோல் நீதிமன்றம் மூலம் எனக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர். இந்த சட்டப் போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவேன்’’ என்றார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் 2009 மற்றும் 2010ம் ஆண்டில் ரமேஷ்பாபுவை எதிர்த்து போட்டியிட்ட ஆதி சீனிவாஸ் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். 2009ம் ஆண்டு வேட்பு மனு தாக்கலில் தான் இந்திய குடிமகன் என்று ரமேஷ்பாபு குறிப்பிட்டிருந்ததை எதிர்ந்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு ஆதி சீனிவாஸ் பாஜ சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013ம் ஆண்டு ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில், ரமேஷ் ஜெர்மன் குடியுரிமை பெற்றவர் என்றும், இந்திய குடிமகன் என்பதற்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாவும் அந்த வழக்கில் சீனிவாஸ் குறிப்பிட்டிருந்தார்.
ஜெர்மனியில் பேராசிரியாக பணியாற்றி வரும் ரமேஷ் கடந்த 2008ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி இந்திய குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தார். இந்திய குடியுரிமை பெற விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்பம் செய்த தேதிக்கு முன்னதாக 12 மாதங்கள் இந்தியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும்.
ஆனால் ரமேஷ் இதை பூர்த்தி செய்யவில்லை. அவர் இந்திய குடிமகன் என்பதை நிராகரித்தும், அவர் தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஒதுக்கிவைக்கவும் உயர்நிதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை விலக்க கோரி சீனிவாஸ் உச்சநீதிமன்றத்தை நாடினார். இதை தொடர்ந்து ரமேஷ் குடியுரிமை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உ ச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]