சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள  பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில்  ‘சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்’  செயல்பாட்டில் உள்ளது. இதை  தமிழ்நாடு  சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, கைம்பெண், கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள், சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு சுய வேலைப்வாய்ப்பு மூலம் வருமானத்தை உயர்த்தும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இலவச சீருடை வழங்கும் திட்டத்துக்கான துணிகள், சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 32 வெட்டும் மையங்களுக்கு ஜவுளி மற்றும் கைத்தறி துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இம்மையங்களில் வெட்டப்படும் துணிகள், சீருடை தைக்க சம்பந்தப்பட்ட தையல் சங்கங்களுக்கு வழங்கப்பட்டு, தைக்கப்பட்ட சீருடைகள் கல்வித்துறையின் 413 உதவி கல்வி அலுவலர்கள் மற்றும் 67 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இந்த சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது

இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. எனவே தகுதி உள்ள பெண்கள் இ சேவை மையம் மூலமாக இலவச ‌ தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 20 முதல் 40 வயது இருப்பதோடு தையல் தெரிந்திருப்பது அவசியம்.  விண்ணப்பதாரர்கள், பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடம் இருந்து தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானச் சான்று ரூ.75,000 கீழ் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை தென் சென்னை மாவட்ட சமூக நலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காரவேலர் மாளிகை, 8வது தளம், இராஜாஜிசாலை, சென்னை- 01 அலுவலத்தில் இருந்து வாங்கி கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, 2 புகைப்படம், வருமானச் சான்று, சாதிச் சான்று, வயதுச் சான்று ஆகிய சான்றுகளுடன் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.