மயிலாடுதுறை: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.30,000 வழங்க வேண்டும் என மழை பாதிப்புகளை ஆய்வு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்தார்.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிய நிலையில், டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளது. கடந்த 10, 11ஆகிய தேதிகளில் பெய்த மிகக் கன மழையால் மயிலாடுதுறை மாவட்டம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. அன்றைய தினம் . சீர்காழியில் 44 செ.மீ. மழை பெய்ததால், சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏராளமான குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முதல்வர் முக ஸ்டாலின் 14ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிச் சென்றார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கடலூர், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில், மழை பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கினார்.
தொடர்ந்து,. சீர்காழி அருகே உள்ள நல்லூர், பன்னீர்க்கோட்டம், ஆலங்குடி உள்ளிட்டப் பகுதிகளில் பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்புகள், குறைகள் குறித்து கேட்டறிந்தார். விவசாயிகள் வயலில் இறங்கி அழுகிய பயிர்களை எடுத்துக் காண்பித்து உரிய நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இந்த ஆய்வின் போது முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ், பி.வி. பாரதி வி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சீர்காழி, பூம்புகார்,தரங்கம்பாடி பகுதிகளில் அதிகளவில் நெற்பயிர்கள் சேதம் ஏற்பட்டு உள்ளது. அரசு கவனமாக செயல்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றவர், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.30,000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், பயிர்காப்பிடு செய்யும் காலத்தை நீடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.