சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கும் முன், வணிகர்களுடன் அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும் இல்லைவயேல் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என வணிகர்கள் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமாகி வருகிறது. தமிழகம் உள்பட 12 மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் அதிகபட்சமாக 14 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கலாம் என மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஊரடங்கு அறிவிப்பதற்கு முன் வியாபாரிகளிடம் அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வழக்கமாக மே 5-ம் தேதி வணிகர்கள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக , வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம், சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா, கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவிக்கும்  திடீர் கட்டுப்பாடுகளால், வணிகர்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  பொதுமக்களின் உயிர் காக்கும் அரசின் நடவடிக்கைக்கு, வணிகர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். ஆனால்,  பொருளாதாரத்தையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

இனிமேல் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கும் முன், வணிகர்களுடன் அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும், இல்லையேல்  அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம், என எச்சரிக்கை விடுத்தார்.