சென்னை: சென்னையை அடுத்து, கோவை மதுரையில் மெட்ரோ ரயிலை கொண்டுவர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசு, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்பந்தம் கோரியுள்ளது.

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்க நகர்ப்புற வளர்ச்சிகளுக்கு மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஏற்கனவே சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் புழக்கத்தில் உள்ள நிலையில், மேலும் பல பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து, மக்கள்தொகை அதிகமுள்ள நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் பணிகளுக்கான ஆய்வுகள் நடைபெற்று திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இ – டெண்டர் கோரப்பட்டுள்ளது. ரூபாய் 3 கோடியில் 150 நாட்களுக்குள் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒப்பந்த்தில் கோரப்பட்டுள்ளது

ரூபாய் 8 ஆயிரம் கோடியில் மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.