சென்னை: முதுநிலை அரசு மருத்துவர் இடஒதுக்கீடு ரத்து செய்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை மருத்துவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இது சமூக நீதிக்கு எதிரானது என்றும், திமுக அரசு இட ஒதுக்கீட்டுக்கு ஓசையின்றி முடிவு கட்டசதித் திட்டம் தீட்டுகிறதோ என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்களான அதிமுக விஜயபாஸ்கர், பாமக அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 30 துறைகளில் எம்டி, எம்எஸ் முதுநிலை மருத்துவப் படிப்புகள் உள்ளன. முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளான எம்டி, எம்எஸ் போன்றவற்றில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு உள்ளது.
இந்த 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், எலும்பியல், மயக்கவியல், நெஞ்சக மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சமூக மருத்துவம், தடயவியல் மருத்துவம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் மற்ற துறைகளில் ஒரு வருடத்திற்கு சேர முடியாது என்றும், அடுத்த கல்வியாண்டிற்கான சூழ்நிலையின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்படும் என்று மருத்துவத் துறை அறிவித்துள்ளது. இதற்கு மருத்துவர் சங்கங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு, அரசுப் பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான ஒருசில பாடப் பிரிவுகளை தவிர மற்ற பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது. திமுக அரசின் இந்த நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைப் பறிக்கும் ஒரு மோசமான செயலாகும் என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “மருத்துவர்கள் தங்கள் நேரம் மற்றும் உழைப்பை மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தியுள்ளனர். அரசு அவர்களது கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், இப்படி ஒரு முடிவை எடுப்பதன் மூலம், அரசு மருத்துவர்களின் எதிர்கால கனவுகளைத் தகர்த்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மத்திய பாஜக அரசின் வேலைவாய்ப்பு ஒழிப்பு கொள்கைகளை திமுக அரசு, எதிர்ப்பதாக கூறி கபட நாடகம் ஆடுவது இந்த உத்தரவின் மூலம் வெளிப்பட்டு உள்ளது. இந்த சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வதோ அல்லது மாற்றம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. இது திமுக அரசின் முழுமையான இரட்டை வேடத்தை காட்டுகிறது.
நீட் தேர்வு முறைகேடு விவரங்களை தரவில்லை… என்டிஏ மீது சிபிசிஐடி குற்றச்சாட்டு – நீதிபதி அதிரடி உத்தரவு!
இது மருத்துவப் பட்ட மேற்படிப்புகளை படிக்க விரும்பும் அரசு மருத்துவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஆகவே, உடனடியாக அரசு பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பிற்கான ஒதுக்கீட்டை ரத்துசெய்து திமுக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும்” என்றும் வலியுறுத்தி உள்ளார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்:
இதுதொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு, 15 வகையான மேற்படிப்புகளுக்கு நடப்பாண்டில் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்தியாவிலேயே மிகச்சிறந்த உட்கட்டமைப்பைக் கொண்டு பொது சுகாதாரத் துறையில் தமிழகம் வலுவாக இருப்பதற்கு பேருதவி புரிபவர்கள் அரசு மருத்துவர்கள். அப்பேற்பட்ட சேவை மருத்துவர்களின் மருத்துவக் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் இந்த “திடீர் அரசாணை” அவர்களுக்கு பேரதிர்ச்சி அளிப்பதோடு, இது சமூக நீதிக்கே எதிரானது.
தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் குறிப்பாக புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் (மருத்துவம் அல்லாத சிறப்பு பிரிவு, காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, தோல் சிகிச்சை பிரிவு, மனநலம் சிகிச்சை பிரிவு) தேவை உள்ள நிலையில் இந்த அரசாணை சேவை மருத்துவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
ஆகவே, அரசு மருத்துவமனைகளில் சேவை புரிந்து வரும் மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான 50% இடஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்த அரசாணையை உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டுமென்றும், அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் பறிபோவதை தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீடு, 15 வகையான படிப்புகளுக்கு நடப்பாண்டில் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. போராடிப் பெற்ற அரசு மருத்துவர் இட ஒதுக்கீட்டுக்கு ஓசையின்றி முடிவு கட்ட திமுக அரசு சதித் திட்டம் தீட்டுகிறதோ என்ற ஐயம் எழுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 2024 – 25ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில், பொது மருத்துவம், பொது அறுவை மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மயக்கவியல் மருத்துவம், நெஞ்சக மருத்துவம், ஊடுகதிரியல் மருத்துவம், சமூக மருத்துவம், தடயவியல் மருத்துவம் ஆகியவை தவிர்த்த மீதமுள்ள 15 மருத்துவ மேற்படிப்புகளில் 2024 – 25ம் ஆண்டில் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்படாது; இனி வரும் ஆண்டுகளில் தேவைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்; இட ஒதுக்கீடு வழங்கப்படும் துறைகளில் கூட, 50% ஒதுக்கீடு செய்யாமல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது சமூக நீதிக்கு எதிரானது.
அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதற்கான காரணம் எதுவும் தமிழக அரசின் ஆணையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், தமிழக அரசு மருத்துவமனைகளில் சில குறிப்பிட்ட துறை மருத்துவர்கள் போதிய எண்ணிக்கையில் இருப்பதால், அத்துறைகளில் மட்டும் அரசு மருத்துவர் ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக புரிந்து கொள்ள முடிகிறது. அரசு மருத்துவர் இட ஒதுக்கீட்டுக்கு இது தான் காரணம் என்றால் அது மிகவும் பிற்போக்கானது ஆகும்.
அரசு மருத்துவமனைகளின் தேவைகளுக்கு ஏற்ப, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அரசு மருத்துவர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால் போதுமானது என்ற கொள்கை நிலைப்பாடு மிகவும் தவறானது ஆகும். இந்தியாவின் பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற திறமையான மருத்துவ வல்லுனர்கள் இல்லாத நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் மட்டும் திறமையான வல்லுனர்கள் அதிக அளவில் இருப்பதற்கு காரணம் 50% அரசு மருத்துவர்கள் ஒதுக்கீடு தான் காரணம்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் இருப்பதாகக் கூறி, இந்த ஒதுக்கீடு நிறுத்தப்பட்டால், அரசு மருத்துவமனைகளுக்கு பல்வேறு துறைகளில் சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படும் போது, உடனடியாக அந்த மருத்துவர்களை உருவாக்க முடியாது. அதனால், அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு தடையில்லாமல் தொடர வேண்டும். அது தான் அறிவார்ந்த கொள்கையாக இருக்கும்.
தமிழக அரசின் மருத்துவக் கட்டமைப்பு என்பதை குறுகிய எல்லைக்குள் சுருக்கிவிடக் கூடாது. மக்களின் தேவைகளுக்கு ஏற்ப மருத்துவக் கட்டமைப்பு விரிவாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இருக்கும் போதிலும், அவை அனைத்திலும் அனைத்து மருத்துவத் துறைகளும் உருவாக்கப்படவில்லை. அதேபோல் வட்ட மருத்துவமனைகளில் பெரும்பாலானவை கிட்டத்தட்ட தொடக்க சுகாதார நிலையங்களைப் போலவே உள்ளன.
அரசு மருத்துவர் ஒதுக்கீட்டின் வாயிலாக அதிக அளவில் மருத்துவ வல்லுனர்கள் உருவாக்கப்பட்டால், அவர்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் வட்ட மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவப் பிரிவுகளை உருவாக்கி பணியமர்த்தலாம். அதை விடுத்து அரசு மருத்துவர் இட ஒதுக்கீட்டையே ரத்து செய்வது, ஒருவேளை வயிறு நிரம்பி விட்டது என்பதற்காக வயலை அழிப்பதற்கு ஒப்பானதாகும். இந்த நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 50% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக நீதிக்கு எதிரான சக்திகள் பல ஆண்டுகளாக முயன்று வருகின்றன. ஒரு சில ஆண்டுகளுக்கு இந்த இட ஒதுக்கீடு தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்தால், அதையே காரணம் காட்டி அந்த இட ஒதுக்கீட்டை நிரந்தரமாக நிறுத்த அச்சக்திகள் முயலக் கூடும். 2017ம் ஆண்டு இந்த வகையான இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், அதற்கு எதிராக கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்ற ஆணைப்படி, 2020-ம் ஆண்டு முதல் இந்த இட ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. அது மீண்டும் ரத்து செய்யப்படாத அளவுக்கு அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 இடங்களைக் கொண்ட ஒரு மருத்துவக் கல்லூரி போதுமானது என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்ப்பதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றனவோ, அக்காரணங்கள் அனைத்தும் தமிழக அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்க்கவும் பொருந்தும். எனவே, சமூக நீதிக்கு எதிரான இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50% ஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.” என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.