சென்னை:
ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் ஓடாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு அரசு தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அதோடு பேருந்துகளை இயக்க தற்காலிக பணியாளர்களையும் நியமனம் செய்தது. தனியார் பேருந்துகளும் ஊக்குவிக்கப்பட்டன. இந்நிலையில் போக்குவரத்த கழக தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இல்லை என்றால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. இதற்கிடையில் தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிலுவைத்தொகை ஆயிரம் கோடி ரூபாய் வழங்க அரசு ஒப்புதல் அளித்ததால் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள நிலுவைத்தொகை செப்டம்பரில் தரப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது. 3 மாதத்துக்கு பின் தொழிலாளர்களின் பிடிப்புத்தொகை கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.