சென்னை: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், கடந்த 10ந்தேதி தொடங்கிய நடைபெற்று வந்த பொதுப்பிரிவு முதல்சுற்று கலந்தாய்வில் 11,595 மாணவர் களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்பு தமிழ்நாட்டில் 1,48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த ஆகஸ்டு மாதம் 20-ம்தேதி தொடங்கியது. அப்போது, மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறப்புப் பிரிவுக்காக மட்டும் நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 668 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து பொதுப்பிரிவு கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டத. அதன்படி, முதல்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தொடங்கிநடைபெற்று வருகிறது. இதில் அரசின் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். முதல்சுற்றில் பங்கேற்க தரவரிசையில் 1 முதல் 14,524 வரையுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 12,294 மாணவர்கள் கலந்துகொண்டு கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களில் 11,595 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இரண்டாவது சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25ந்தேதி தொடங்குகிறது. மூன்றாம் சுற்று அக்டோபர் 13ந்தேதியும்; நான்காம் சுற்று கலந்தாய்வு அக்டோபர் 29ந்தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு சுற்றிலும், மாணவா்களின் தரவரிசைப்படி பங்கேற்க பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
துணை கலந்தாய்வு நவம்பர் 15 முதல் 20ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இணையவழி கலந்தாய்வில் மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்ய இரண்டு நாள்கள்; தற்காலிக ஒதுக்கீட்டை இறுதி செய்ய இரண்டு நாள்கள்; கல்லூரிகளில் சேர ஒரு வாரம் என 11 நாள்கள் ஒதுக்கப்படுகின்றன.
ஆன்லைன் கலந்தாய்வு நடைமுறைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என, மாணவா்களுக்கு வழிகாட்டும் வகையில், உயா்கல்வி துறை சாா்பில் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பொறியியல் கலந்தாய்வு சோ்க்கைக் குழுவின் www.tneaonline.org என்ற இணையதளத்தில், இந்த விடியோ இணைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.