சென்னை,
தொழில் நடத்த உகந்த இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 18வது இடத்திற்கு தள்ளப்பட்டது. உலக வங்கியும் மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை ஆய்வில் இந்த விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் வணிகம் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது என்று காட்டமாக விமர்சித்துள்ளார் ராமதாஸ்.
இதுகுறித்து பாமக தலைவர் ராமதாஸ் கூறியிருப்பதாவது,
இந்தியாவில் வணிகம் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து இருக்கிறது.
இந்தியாவின் 29 மாநிலங்கள், 7 ஒன்றியப் பகுதிகள் என மொத்தம் 36 நிர்வாகங்கள் கொண்ட பட்டியலில் தமிழகம் 18 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களை மட்டும் கணக்கில் கொண்டால் தமிழ்நாட்டிற்கு கடைசி இடமே கிடைத்திருக்கிறது.
தொழில் மற்றும் வணிகம் தொடங்குவதற்கு பல்வேறு வகையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதால் மொத்தம் 340 சீர்திருத்தங்களை பட்டியலிட்ட மத்திய தொழில் – வணிக அமைச்சகத்தின் தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை,
அவற்றில் எத்தனை சீர்திருத்தங்களை ஒவ்வொரு மாநிலமும் செயல்படுத்தியுள்ளது என்பதன் அடிப்படையில், உலக வங்கியின் வழிகாட்டுதலில் இந்த தரவரிசைப் பட்டியலைத் தயாரித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 340 சீர்திருத்தங்களில் 211 சீர்திருத்தங்களை மட்டுமே செயல்படுத்தியிருப்பதால் 62.80 மதிப்பெண்களுடன் 18 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
அண்டை மாநிலங்களான ஆந்திரமும், தெலுங்கானாவும் முறையே 98.78 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.
ஆந்திர அரசு 325 சீர்திருத்தங்களையும், தெலுங்கானா அரசு 324 சீர்திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளன.
கடந்த முறை இந்தப் பட்டியலில் 12வது இடத்தைப் பிடித்திருந்த தமிழகம் இம்முறை 6 இடங்கள் பின்தங்கியி இருப்பது மிகவும் கவலையளிக்கிறது.
இந்தியாவில் அதிக தொழில்மயமான மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கை யில் 37,378 தொழிற்சாலைகளை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
உலகின் புகழ்பெற்ற மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவங்களில் பெரும்பாலானவை அவற்றின் உற்பத்திப்பிரிவை தமிழகத்தில் அமைத்துள்ளன.
அவ்வாறு இருக்கும் போது தொழில் நிறுவனங்கள் எளிதில் தொழில் செய்ய வசதியாக சீர்திருத்தங்களை தமிழகம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவாக தமிழகம் இப்பின்னடைவை சந்தித்திருக்கிறது.
அதேபோல், வணிகம் செய்வதற்கு ஏற்ற 17 மாநகரங்கள் பட்டியலில் சென்னை நகரம் 15 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்தியாவில் வளர்ச்சியடையாத மாநிலங்கள் என்றழைக்கப்படும் 7 மாநிலங்களில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், இராஜஸ்தான் ஆகியவை முறையே 4,5,7,8 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன.
இப்பட்டியலில் உள்ள இன்னொரு மாநிலமான ஒடிஸா 11 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. உத்தரபிரதேசமும், பிகாரும் கூட முன்னணி இடங்களை பிடித்துள்ள நிலையில், அவற்றைவிட தமிழகம் மிகவும் பின்தங்கியிருப்பது தலைகுனிய வேண்டிய விஷயமாகும்.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி வருகிறது.
அண்டை மாநிலங்களான ஆந்திராவும், தெலுங்கானாவும் தனித்தனி மாநிலங்களாக பிரிந்த பின் ஒன்றுக்கொன்று போட்டிப்போட்டுக் கொண்டு தொழில் துறையில் வளர்ச்சியடைந்து வருகின்றன. அவற்றின் வளர்ச்சி தமிழகத்தின் வீழ்ச்சியாக அமைவது இயல்பானது.
எனவே, தொழில்துறை சீர்திருத்தங்களை விரைவு படுத்தி தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை பெருக்க முற்போக்கானத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.