சென்னை:

மிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான மானிய கோரிக்கை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இன்றைய கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்ட மிட்டுள்ளனர். இதன் காரணமாக இன்றைய கூட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கும் தமிழக சட்டசபை கூட்டத் தொடர்  ஜூலை 9ம் தேதி வரை 23 நாட்கள் நடைபெறவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெறும் என்றும் அதன் பின்னர் துறை வாரியான மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல் தொழில் நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் கண்டித்து,  இன்று தமிழக சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள  திமுக உறுப்பினர்கள்  கருப்புச்சட்டை அணிந்து வந்துள்ளனர். இதன் காரணமாக இன்றைய கூட்டத்தில் தூத்துகுடி துப்பாக்கி சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள்  கேள்வி எழுப்பலாம் என்றும், அதை சபாநாயகர் மறுக்கும் பட்சத்தில் சபைக்குள் களேபரம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக சட்டசபை வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  போலீசார்  பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.