சென்னை: தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மார்ச் 31ந்தேதிவரை தபால் வாக்குகள் பெறும் நடவடிக்கைகள் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து, அதற்கான பாரங்கள் கொடுத்து, தபால் வாக்களிப்பவர்களிடம் அனுமதி பெற்றப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 2,44,000 பேர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பத்திருந்தனர்.
சென்னையில் 12,000 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில், 7,300 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தபால் வாக்களிக்க சம்மதம் தெரிவித்தவர்களிடம் முதியோர்களிடம் இன்றுமுதல் வாக்குப்பதிவு பெறும் பணி நடைபெறுகிறது. இதற்காக 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மூலம் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்படுகின்றன.
இந்த குழுக்களில் வாக்குப்பதிவு அலுவலர்கள் 3 பேர், நுண் பார்வையாளர், காவலர், வீடியோ ஒளிப்பதிவாளர் ஆகியோர் இடம்பெறுவர். தபால் வாக்களிப்பவர் களுக்கான தேதி, நேரம் ஆகியவை முன்கூட்டியே செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, தபால் வாக்கு செலுத்துபவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகள் பெறும் பணி தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் சேகரிக்கப்படும் தபால் வாக்குகள் பெட்டியில் வைக்கப்பட்டு சீலிடப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.