சென்னை:
அதிமுக கூட்டணியில் பாமக-விற்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக, திமுக கட்சிகள் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்த உள்ளன.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக-வுடன் தொகுதி பங்கீடு குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றது. இதில் பாமக-விற்கு அதிகம் ஆதரவு இருக்கும் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இதனிடையே அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக வன்னியர்கள் களப்பணியாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள், அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என சொல்லும் அளவுக்கு, சட்டப்பேரவை தேர்தலில் ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணியும் அமைய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.