சென்னை:
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று (மார்ச் 28ம் தேதி) வாக்குப்பதிவு தொடங்கி நடைபெறுகிறது.
தேர்தல் அதிகாரிகளாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜி.எம்.அக்பர்அலி, மதிவாணன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் கண்காணிப்பில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
பார் கவுன்சில் தேர்தலில், கோடி கணக்கில் பணம் விளையாடுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கும் தொடரப்பட்டது.
இதன் காரணமாக, இந்த முறை பார் கவுன்சில் தேர்தல் விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஏற்கனவே அறிவித்தபடி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 93 ஆயிரம் வழக்கறிஞர்கள் உள்ள நிலையில், பார் கவுன்சில் தேர்தலில் வாக்களிக்க 53ஆயிரத்து 620 வழக்கறிஞர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
25 பேரை கொண்ட தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 25 பேர் உறுப்பினர்களாக தேர்வாக உள்ள நிலையில், 192 பேர் போட்டியில் உள்ளனர்.
தேர்தல் வாக்குப்பதிவுக்காக தமிழகம் முழுவதும் 171 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 20 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் அனைத்து மையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இதற்காக அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.