சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கேட்டு, செ.கு.தமிழரசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது, முதல்வருடன் நெருக்கமாக உள்ள தமிழரசன், இதுகுறித்து நேரடியாகவே பேசியிருக்கலாமே என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடினார்.
“மகாராஷ்டிராவில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பை வரவேற்கிறோம் என்றவர், இதை மோடிக்கு வாக்களித்தவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.
மேலும், சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நேர்மையானவர். யாருடைய செல்வாக்குக்குக்கும் அடிபணியாமல் சிறப்பாக செயலாற்றி வருகிறார். பல பாரம்பரிய சிலைகளை மீட்டுள்ளார். அவருடைய சேவை தமிழகத்தில் தொடர வேண்டியுள்ளது. ஆனால், அவருக்கு கால அவகாசம் வழங்க தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவிக்கிறது. மடியிலே கணம் இல்லையென்றால் வழியிலேயே பயம் இல்லையே என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசியவர், தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ஆனால், மத்திய மாநில அரசுகள் அது பற்றி கவலைப்படவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என செ.கு.தமிழரசன் வழக்கு தொடர்ந்தது தொடர்பாக கருத்து தெரிவித்தவர், ‘முதலமைச்சருக்கும் செ.கு.தமிழரசனுக்கும் இடையே உள்ள உறவு அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும்போது, அவர் வழக்கு தொடர வேண்டிய காரணம் என்ன?, உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கருதினால் அவர் நேரடியாக முதலமைச்சரை சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இருக்கலாமே என்றவர், முதலமைச்சர் ஆலோசனைப்படி தான் செ.கு.தமிழரசன் வழக்கு தொடர்ந்துள்ளார்’ என குற்றம் சாட்டினார்.