சென்னை: மூத்த எழுத்தாளர் மறைந்த கி.ராஜநாராயணனுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கி.ரா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில்,
“கி.ரா என்று எழுத்துலகில் அன்போடு அழைக்கப்பெறும் கி.ராஜநாரயணன் மறைவு கரிசல் மண்ணின் கதைகளுக்கு ஓர் முற்றுப்புள்ளி. தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லியான அவரை இழந்து நிற்கிறோம்.
தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள். யார் ஆறுதல் சொல்வார்? இந்த மண் உள்ளவரை, அதில் கரிசல் இலக்கியம் உள்ளவரை, ஏன், தமிழ் உள்ளவரை நமது உள்ளங்களில் அவரது புகழ் வாழும்.
அந்தோ! அந்தக் கரிசல் குயில் கூவுவதை நிறுத்திக் கொண்டதே! அவர் மறையவில்லை; எழுத்துகளாய் உயிர் வாழ்கிறார். நம் உயிரில் கலந்து வாழ்கிறார். வாழ்க அவரது புகழ்! அவரது குடும்பத்தினருக்கும், சக படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும், தமிழர்களுக்கும் என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சாகித்ய அகாடமி விருதுபெற்று தமிழ் இலக்கியத்தின் பேராளுமையாய்ப் பெருவாழ்வு வாழ்ந்த கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா.வின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.