சென்னை : சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் பில்டிங்கில்  ‘தமிழ்’ வாழ்க பெயர் பலகை மீண்டும் இடம்பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பெயர் பலகை.பராமரிப்பின்றி இருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு பதவி வந்ததும், மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, கருணாநிதி பிறந்த நாளான இன்று வைக்கப்பட்டு உள்ளது.

கடந்த, 2006 – 11ம் ஆண்டு மறைந்த திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்களில், தமிழ் வாழ்க’ பலகை அமைக்க உத்தரவிப்பட்டு, அமைக்கப்பட்டது. இதனால், எங்கு நோக்கிலும் இரவு பகல் பாராது தமிழ் வாழ்க என்ற பெயர் பளிச்சிட்டது.

ஆனால், பின்னர் ஏற்பட்ட  ஆட்சி மாற்றம் காரணமாக,  பெரும்பாலான அலுவலகங்களில், தமிழ் வாழ்க பொறித்த பெயர் பலகை அகற்றப்பட்டது. அதேபோல், சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையிலும் அகற்றப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், ஜெயலலிதா அரசு அதை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், சுமார்  10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக அரியணையில் ஏறியதைத் தெடர்ந்து, தமிழ் வாழ்க பெயர் பலகை மீண்டும் வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ரிப்பன் மாளிகைக்கு, கொரோனா தடுப்பு பணி தொடர்பான நிகழ்ச்சிக்கு சென்றபோது, அங்கு மீண்டுங்ம  தமிழ் வாழ்க பெயர் பலகையை,  அமைக்க அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து  ரிப்பன் மாளிகையில், தமிழ் வாழ்க பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகை இன்று திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.