ஸ்ரீநகர்,
காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
கடந்த சில நாட்களாக காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் பனிச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் இந்திய ராணுவ வீரர்கள் பலர் சிக்கினர். இதில் 10 வீரர்களின் உடல்கள் மீட்பு குழுவால் மீட்கப்பட்டது. மேலும் பலரை காணவில்லை.
பலியான வீரர்களில் ஒருவர், தமிழகத்தை சேர்ந்த இளவரசன் என்பது தெரிய வந்துள்ளது.
இவர், தஞ்சையை அடுத்த கண்ணந்தகுடி கீழையுரை சேர்ந்தவர். இவரது குடும்பம் விவசாய குடும்பம், அவரது அப்பா பெயர் பூமிநாதன், விவசாயி.
இளவரசன் உயிரிழந்த செய்தி அறிந்ததும் கீரையூரே சோகத்தில் மூழ்கியது. மேலும் பல வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.
தற்போது காஷ்மீரில் உறைநிலைக்கும் கீழே வெப்பநிலை நிலவுவதால் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மலை மற்றும் மலைச்சரிவு பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பனிச்சரிவு நிகழ்ந்த இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.