(பைல் படம்)

சென்னை :

மிழகத்தின் தலைநகரான  சென்னை விமான நிலையத்தில், தமிழகத்தின் தாய்மொழியான தமிழ் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது,  விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு பலகையில் (டிஸ்பிளே போர்டு)  இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த செயல் தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இதன் காரணமாக ஆங்கிலம் தெரியாத  தமிழகத்தை சேர்ந்த  பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

மத்தியில் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு நாடு முழுவதும் இந்தி மொழியை திணித்து வருகிறது. இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழகத்தில் இருமொழி கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருவதால், இந்திக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் மூலம் இந்தியை திணித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முதல் விமான நிலையங்களில், விமானம் வந்து சேரும் விவரம், மற்றும் புறப்பாடு விவரம் குறித்த அறிவிப்பு வெளியிடும்  டிஸ்பிளே போர்டில் இருந்து தமிழ் அகற்றப்பட்டுள்ளது.

இதுவரை  தமிழ், ஆங்கிலம், இந்தி என் 3 மொழிகளில் வெளியிடப்பட்டு வந்த அறிவிப்பில் இருந்து தமிழ் நீக்கப்பட்டு,   இனி ஆங்கிலம், இந்தி என 2 இரண்டு மொழியில் மட்டும் அறிவிப்புகள் வெளியாகும் என்ற வகையில் மாற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்று விமான நிலையம் வந்த தமிழ் பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். தமிழகத்தின் தலைநகரிலேயே தமிழை மத்திய அரசு திட்டமிட்டு அழித்து வருவதாக குற்றம் சாட்டினர்.

மத்திய அரசின் இந்த அடாவடி செயலுக்கு தமிழ் அறிஞர்கள் உள்பட அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.