சென்னை:

பாகிஸ்தானிடம் சிக்கி உள்ள இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தனின் வீட்டுக்கு நேரில் சென்று, அவரது பெற்றோரிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா ஆகியோர் ஆறுதல் கூறினர்.

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படையை சேர்ந்த விமானம் ஒன்று பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுடப்பட்ட நிலையில், அதிலிருந்த சென்னையை சேர்ந்த வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  அவரை பத்திரமாக  மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கத்தில் உள்ள  அபினந்தன் வீட்டில் அவரது தந்தை வரதமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் வசித்து வருகிறார்கள். அங்கு தமிழக அரசியல் கட்சியினர் சென்று அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. ராமச்சந்திரன், போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் நேற்று அபினந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.

தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு இன்று அபினந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா சென்றிருந்தார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அபினந்தனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதையடுத்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் இன்று அபினந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.