சென்னை:
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையால் தமிழக மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று தேர்தல் அறிக்கை வெளி யிடப்பட்டது. அதில், தமிழகத்தில் நீட் தேர்வு உள்பட ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் உதவி மற்றும் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் உள்பட பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வரவேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில், திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பது வரவேற்புக்குரியது. ஏழ்மை ஒழிப்புத் திட்டம் இந்திய வரலாற்றில் மிக முக்கியச் சாதனையாக அமையப்போகிறது. நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதி எண்ணற்ற இளைஞர்களின் இதயத்தில் பால் வார்க்கிறது.
விவசாயக் கடன் தள்ளுபடி, மீனவர்களுக்கு தனி அமைச்சகம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற மாநில அரசு அளித்த வாக்குறுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழர்களின் குரலுக்கு அக்கட்சி அளித்திருக்கும் மதிப்பிற்கு மிகச் சிறந்த உதாரணம்.
தேர்தல் முடிவுகள் வரும் முன்னரே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தமிழக மக்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டது.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.