சென்னை: நாட்டின் ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு அதிகம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பாராட்டி உள்ளார்.
முன்னதாக ஜவுளித்துறை தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டின் ஜவுளி உற்பத்திக்கு தேவையான நிதியை வழங்கும்படி வலியுறுத்தினார். பின்னர் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சென்னை தரமணி தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு படித்து வரும், மாணவர்கள் வடிவமைத்த கைவினைப் பொருட்கள், ஆடைகளைப் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம் என்பது நமது நாட்டின் பெருமை. ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பை ஊக்குவிக்கும் வகையில், ஜவுளித்துறை சார்பில், விஷன் நெக்ஸ்ட் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
இந்த தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் இருந்து பயிற்சி முடித்து வெளியேறும் மாணவர்கள் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள் இத்தனை ஆண்டுகளாக, ஆடை வடிவமைப்பு தொடர்பாக எதிர்கால தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள இவ்வளவு நாட்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை சார்ந்து இருந்தோம். ஆனால், தற்போது நிலைமை மாறி இருக்கிறது.
விஷன் நெக்ஸ்ட் எனும் திட்டத்தில், இந்தியாவின் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே ஆடை உற்பத்தி மற்றும் வடிவமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் தற்போது ஜவுளி தொழிலில் சந்தையின் மதிப்பு 176 பில்லியன் டாலராக உள்ளது. இது 2030-ம் ஆண்டில் 350 பில்லியன் டாலராக உயரும். ஜவுளித்துறை உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, விவசாயிகள், உற்பத்தியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். இதுபோல, தற்போது 4.6 கோடி பணியாளர்கள் ஜவுளி உற்பத்தி துறையில் பணியாற்றி வருகிறார்கள் இது, 2030-ம் ஆண்டில் 6 கோடியாக இருக்கும்.
ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு தேவையான நிதியை எந்த பாகுபாடுமின்றி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி வருகிறோம். விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு ஜவுளித் துறையில் முன்னேறிய மாநிலமாக விளங்குகிறது. மேலும், இத்துறையில் தமிழகம் முக்கிய பங்காற்றி வருகிறது. வங்கதேசத்தில் தற்போதைய அரசியல் சூழலால், இந்திய ஜவுளி துறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இவ்வாறு அமைச்சர் கூறினார்