தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து நாட்டின் மின் கட்டமைப்பிற்கு 100 பில்லியன் யூனிட் (கிலோவாட்-மணிநேர) மின்சாரத்தை வழங்கியுள்ளது.

இந்தியா – ரஷ்யா இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணுமின் உற்பத்தி நிலையத்தின் 2 அலகுகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

தற்போது செயல்பாட்டில் உள்ள இந்த 2 அலகுகளும் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டவை.

இதே திறன் கொண்ட ரஷ்ய VVER-1000 ரகத்தின் மேலும் நான்கு அணுஉலைகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளது.

100 பில்லியன் யூனிட் வழங்கப்பட்டது குறித்து ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான Rosatom கூறுகையில், தற்போது செயல்பாட்டில் உள்ள அணுஉலைகள் இரண்டும் அதன் மதிப்பிடப்பட்ட உற்பத்தி திறனுக்கு மேல் செயல்திறனைக் காட்டுகின்றன.

ஆண்டுதோறும் 16 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை மிச்சப்படுத்துவதுடன் 5 கோடி இந்திய குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியா – ரஷ்யா இடையே 1998ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான கூடங்குளம் அணுமின் நிலையம் இந்திய துணைக் கண்டத்தின் தென்கோடியில் உள்ள அணுமின் நிலையமாகும்.

இந்த அணுமின் நிலையத்திற்கு குறிப்பாக பல மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

குளிர்ச்சியான கடல் நீரை தடையின்றி வழங்குவதை உறுதிசெய்ய ஹைட்ராலிக் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்க தேவையான தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவின் மின்தேவையை பூர்த்தி செய்யும் மிகப்பெரிய அலகாக உருவெடுத்துள்ள இதன் முதல் அலகு 2013ம் ஆண்டு நாட்டின் மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்பட்டதை அடுத்து 2014 டிசம்பர் 31 அன்று இதன் வணிக ரீதியான செயல்பாடு துவங்கியது.

பொதுமக்கள் பயன்படுத்தும் அணுசக்தி தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்வது ரஷ்யாவின் பொருளாதாரக் கொள்கையின் முக்கிய அங்கமாகும். ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான ரோசாட்டமின் மிகப்பெரிய வாடிக்கையாளர் இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய பொருளாதாரம் மீது உலகம் முழுவதும் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பொருட்கள், சேவைகள் மற்றும் மூலப்பொருட்களை வழங்குவதற்கான அதன் ஏற்றுமதி திறனை ரஷ்யா அதிகரித்துள்ளது. இந்திய வாடிக்கையாளருக்கும் ரஷ்ய ஒப்பந்தக்காரருக்கும் இடையே நெருக்கமான மற்றும் விரிவான ஒத்துழைப்புடன் அனைத்து பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.