சென்னை: தமிழகத்தின் முதல் மகளிர் கல்லூரி ராணி மேரிக் கல்லூரிஎன்றும், பெண்கள் பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது அடிப்படை உரிமை என்றும் ராணிமேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், பட்டம் பெறுபவர்கள் கல்லூரியில் இருந்து விடைபெறுகிறீர்களே தவிர, கற்பதிலிருந்து அல்ல. பெண்களுக்கு ஒளிவிளக்காக ராணி மேரி கல்லூரி திகழ்கிறது. தமிழகத்திலேயே முதல் முதலாக தொடங்கப்பட்ட மகளிர் கல்லூரி ராணி மேரி கல்லூரி தான்.

பட்டங்களைப் பெறுபவர்கள், பாடங்களைக் கற்பதிலிருந்து பாடங்களை உருவாக்கும் அளவுக்கு மாணவர்கள் உயர வேண்டும். கம்பீரமான பாரம்பரியமான பெருமையைக் கொண்டது ராணி மேரி கல்லூரி. இந்தியாவில் முதன் முதலாகத் தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ஒன்றும், தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி என்ற பெருமையையும் கொண்டது ராணி மேரி கல்லூரி. பட்டம் பெறும் நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்நாளிலும் மறக்க முடியாத நாளாக இருக்கும். மாணவர்கள் பெற்ற அறிவு அவர்களை மேலும் மேலும் உயர்த்தட்டும் என்று முதல்வர் கூறினார். மேலும், பெண்கள் பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது அடிப்படை உரிமை என்றும்  கூறினார்

மாணவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக மாற வேண்டும். மேலும் மேலும் படிக்க வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரிகள் தங்களது அடுத்த தலைமுறையே படிக்க வைக்க வேண்டும். பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை திமுக தலைமையிலான அரசு கொண்டுவந்துள்ளது.

ராணி மேரி கல்லூரிக்காக போராடியது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று. ராணி மேரி கல்லூரியை இடிக்க கடந்த கால அதிமுக அரசு முயன்றது. அதை எதிர்த்து போராடிய கல்லூரி மாணவிகளுக்கு திமுக சார்பில் நேரில் ஆதரவு அளித்தேன். மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக என்னை போலீசார் கைது செய்தனர் என தெரிவித்துள்ளார்.

.