சென்னை: தமிழ்நாட்டின் நெடுஞ்சாலை அதானி நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார்.

விமான நிலையங்கள், துறைமுகங்களை தொடர்ந்து நெடுஞ்சாலைகள் தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, திருச்சி – துவரங்குறிச்சி – மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையான   124 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அதானி குழுமத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது- இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

இந்தியாவின் மிக முக்கிய எக்ஸ்பிரஸ்வேக்கள் பெரும்பாலும் வட இந்தியாவில் மட்டுமே இருக்கிறது. அங்கு இருப்பது போல நீண்ட எக்ஸ்பிரஸ் வே சாலைகள் இன்னும் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. இதனால் தமிழகம் பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை, விவசாய நிலங்களில் சாலைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு, மக்கள் போராட்டம் உள்ளிட்டவை காரணமாக உள்ளது. தமிழகத்தில் புதிய விரைவுச்சாலைகள், மேம்பாலங்கள், புறவழிச்சாலைகள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமீபத்தில் நாடு முழுவதும் 6747 கிமீ தூரத்திற்கு எக்ஸ்பிரஸ் உட்பட புதிய சாலை திட்டங்களின் அறிவிப்பை பல இடங்களில் வெளியிட்டது. இந்த திட்டங்களின் இரண்டாம் கட்டத்தின் போது, விரைவுச்சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் புறவழிச்சாலைகளை உள்ளடக்கிய புதிய திட்டங்களால் தமிழகமும் பயனடையும் என்று தெரிவித்துள்ளது .

புதிய விரைவுச்சாலை அமைக்க NHAI முடிவு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் விரைவான போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் திண்டுக்கல் – தேனி – குமிளி பிரிவு, திருச்சி – காரைக்குடி மற்றும் நாகப்பட்டினம் – தஞ்சாவூர் ஆகிய இருவழி தேசிய நெடுஞ்சாலைகளை இரட்டிப்பாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தயாராக உள்ளது என குறிப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 124 கி.மீ தேசிய நெடுஞ்சாலைப் பகுதியை சுங்கச்சாவடி-செயல்படுத்தல்-பரிமாற்ற (TOT) மாதிரியின் கீழ் நிர்வகிக்க அதானி சாலை போக்குவரத்து நிறுவனம் அதிக ஏலத்தில் எடுத்துள்ளது, இதற்கான பட்ஜெட் ரூ.1,692 கோடி ஆகும். இதன் மூலம் அதானி குழுமம் தமிழகத்தில் புதிய நெடுஞ்சாலையை அமைக்க தயாராக உள்ளது. 

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டின் திருச்சி – துவரங்குறிச்சி – மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை தனியார் வசம் ஒப்பந்த அடிப்படையில் மேம்பாடு மற்றும் அரசின் வருமான உயர்விற்காக வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அதானி சாலை போக்குவரத்து குழுமம் ரூ.1,692 கோடிக்கு இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. 124 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை தனியார்மய திட்டத்தின் மூலம் அதானி குழுமத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 15 ஆம் தேதி ஒரே நாளில் 7.47 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் உயர்வு பெற்று ஆதாயம் அடைந்துள்ளன. இத்தகைய பங்கு பரிவர்த்தனையினால் ஏற்பட்ட லாபத்தின் மூலம் அதானி குழும பங்குகளுக்கு ஏற்பட்ட உயர்வினால் உலகத்தில் உள்ள 20 கோடீஸ்வரர்களில் 73.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உயர்ந்துள்ளதாக ப்ளும் பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக அதானியை உயர்த்துவதினால் பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் அடைந்த ஆதாயம் என்ன, பயன் என்ன, ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர்களை ஒன்றிய பாஜ அரசின் பாரபட்சமான அணுகுமுறையினால் கொள்ளை லாபம் சம்பாதிக்க அனுமதிப்பதன் மூலம் பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவு அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து பலமுறை எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியும் பிரதமர் மோடியால் அதானியை கைவிட முடியவில்லை. இதற்கு பின்னாலே இருக்கிற ரகசியத்தை தான் ஹின்டன்பர்க் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் அம்பலப்படுத்தின.

எந்த குற்றச்சாட்டை எவர் கூறினாலும் அதானி மீது எந்த விசாரணைக்கும் உட்படுத்தாமல் மோடி அரசு பாதுகாத்து வருகிறது. தம்மை மனிதப் புனிதராக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பிரதமர் மோடி, அதானி சொத்து குவிப்பின் மூலம் பா.ஜ பெற்ற ஆதாயம் என்ன என்பதை நாட்டு மக்கள் அறிய விரும்புகிறார்கள். ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறையில் 2023 டிசம்பரில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில் ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கை அளித்திருந்தது.

ஆனால், இதுகுறித்து எந்த விசாரணையும் நடத்த மோடி அரசு தயாராக இல்லை. மோடியின் அதானி ஆதரவு நடவடிக்கை ஊழல் இல்லை என்றால் எது ஊழல் என்பதை பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் தான் விளக்க வேண்டும் மோடி – அதானி கூட்டுக் கொள்ளைக்கு இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் அதற்குரிய விலையை பிரதமர் மோடியும், பாஜவும் கொடுக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு கூறியுள்ளார்.