சென்னை,

ன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், இந்தியை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது என்று கூறினார். மேலும், அதிமுகவில் சசிகலா குடும்பத்துக்கு இடமில்லை என்ற முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கூறினார்.

நேற்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தது. இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றுள்ள நிலையில், தமிழக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,   “வருமானவரி விலக்கு உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். வருமான வரி செலுத்துவோருக்கு நிரந்தர கழிவாக ரூ.40,000 வழங்கியிருக்கின்றனர். இதை இன்னும் உயர்த்த வேண்டும் என்று கூறினார்.

மேலும், நேற்றைய பட்ஜெட் தாக்கலின்போது, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இந்தி, ஆங்கிலம் என மாற்றிமாற்றி பட்ஜெட்டை வாசித்தது பற்றிய கேள்விக்கு, “அண்ணாவின் வழியில் இந்தியை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைத் தான் நாம் கடைப்பிடித்து வருகிறோம்”  என்றும் கூறினார்.

மேலும், தமிழகத்தின் கோரிக்கையான,  கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு மற்றும் காவிரி நதிகளை இணைக்கும் திட்டம், ரயில்வே திட்டங்களில் தமிழகத்தின் கோரிக்கைகளை  பரிசீலனை செயவார்கள் என்று நம்புவதாகவும், கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச் சாலையாக மாற்றும் திட்டத்திற்கும் இந்த ஆண்டு நிதி ஒதுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தி வருவது குறித்த கேள்விக்கும், சில ஊடகங்களில், சசிகலாவை கட்சியில் சேர்க்க  ஓபிஎஸ் வலியுறுத்தியதாக வந்த செய்தி குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார்,  சசிகலா குடும்பத்தினரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதில்லை என்ற முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று திட்ட வட்டமாக கூறினார்.