சென்னை:

சென்னை புறநகர் பகுதியான ஸ்ரீபெரும்புதூரில் ரூ.4 ஆயிரம் கோடியில் ‘சியட்’ டயர் தொழிற்சாலையை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சியில் பேசும்போது, டயர் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொழிற்சாலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். முன்னார்,  ‘சியட்’ டயர் தொழிற்சாலை மேலாண்மை இயக்குனர் ஆனந்த் கோயங்கா வரவேற்று பேசினார்.

அதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி,  இன்று நான் துவக்கி வைத்துள்ள இந்தத் தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி எனது முன்னிலையில் செய்யப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டு பதினெட்டே மாதங்களில், உத்தரவாதம் அளித்த மொத்த முதலீடான 4,000 கோடி ரூபாயில், முதல்கட்டமாக, 1,400 கோடி ரூபாயை முதலீடு  செய்து, இன்று முழு அளவிலான வணிக உற்பத்தியை துவக்கியுள்ளது சியட் நிறுவனம்.

மிக விரைவாக செயல்பட்டு, தனது உற்பத்தியை துவக்கியுள்ள இந்த நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைமையகமாக விளங்கும் தமிழ்நாடு, டயர் உற்பத்தியிலும் முதலிடம் பெற்றுள்ளது. அப்பல்லோ, ஜே.கே., மிஷ்லின், எம்.ஆர்.எப்., டி.வி.எஸ்., யோகோ ஹாமா என, திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரை, பல டயர் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனங்கள் முதல் போர் விமானங்கள் வரை அனைத்து வகை பயன்பாட்டிற்குமான டயர்களும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே பகிர்ந்து கொள்கின்றேன். இந்தியாவின் 40 சதவீத டயர் உற்பத்தி தமிழ்நாட்டில் தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மணிமகுடத்தில், மேலும் ஒரு மாணிக்கமாக இந்தத் தொழிற்சாலை அமைந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் சக்திகளில் ஒரு மாநிலம் என்று சொன்னால், தமிழ்நாடு தான் என்று இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன் என்று கூறியவர்,  18 மாதம் என்ற குறுகிய காலகட்டத்தில் திட்டத்தை செயல்படுத்திய ஆனந்த் கோயங்கா மற்றும் அவரது குழுவிற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இது சியட் நிறுவனத்தின் திறமையையும், அதற்கு அரசு அளித்து வரும் ஆதரவையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. சியட் நிறுவனத்தை சேர்ந்த ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன். தமிழகத்தில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு வசதிகளை ஆனந்த் கோயங்கா துவக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

சியட் நிறுவனம், தனது உற்பத்தி தொழிற்சாலையை துவங்கியதைப் போல, விரைவில் தனது ஆராய்ச்சி பிரிவையும் சென்னையில் துவங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த  நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், சியட் நிறுவனத்தின் பங்குதாரர்கள், பணியாளர்கள் மற்றும் பழனி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், காஞ்சி பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.