சென்னை: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. இதன் காரணமாக, 6-வது முறையாக தொடர்ந்து தமிழகஅரசு விருது பெறுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருது இன்று வழங்கப்படுகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6 ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ள தமிழக அரசுக்கு இன்று மத்திய விருது வழங்கப்படுகிறது.
இந்தியாவில் முதன் முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் அளிப்பதன் மூலம் 8 நபர்களுக்கு வாழ்வளிக்க முடியும். அதன்படி ஏழை – எளிய மக்களுக்கு இலவசமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
இதற்கு, அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மேலும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தேவைப்படும் நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளின் நலனை கண்காணித்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைகளில் இருந்து அதற்கான விவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெற்று, ஆய்வு செய்ய 10 ஆண்டுகளுக்கான தரவுகளை தேசிய அளவில் சேகரித்த முதல் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காலத்திலும் நெறிமுறைகளை உருவாக்கி தடையின்றி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு தமிழகம் சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை குறித்து தமிழகஅரசு மேற்கொண்டு வரும் பிரசாரங்களால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதும் அதிகரித்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை சுமார், 1382 கொடையாளர்களிடமிருந்து 8,163 உறுப்புகள் பெறப்பட்டுள்ளது.
இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தமிழக அரசு கடந்த 5 முறை மத்திய அரசிடமிருந்து விருதை பெற்று வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம்முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கான விருதை தமிழக சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று விருது வழங்குகிறார்.
புதுக்கோட்டையில் இருந்து காணொலி மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் விருதை பெறுகிறார். தமிழகம் 6வது ஆண்டாக தொடர்ந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடத்தில் தொடர்ந்து வருவது பாராட்டுக்குரியது.