சென்னை: “தமிழ்நாடு மாணவர்கள் உலகம் எங்கும் சென்று சாதிக்க வேண்டும்”  என காணொளி காட்சி மூலம்  தீரன் சின்னமலை கல்லூரியை திறந்து வைத்து உரையாற்றிய  முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூர் வஞ்சிப்பாளையம் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  புதிய கட்டிடத்தை காணொலிக்காட்சி வாயிலாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருப்பூா் கொங்கு வேளாளா் அறக்கட்டளை சாா்பில் அவிநாசி-மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தீரன் சின்னமலை மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இந்த கல்லூரியின் கட்டிடங்களை திறந்து வைத்து  மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர்  ஸ்டாலின், தீரன் சின்னமலை பெயரை சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருகிறது என்றும், உடல்நிலையை கருத்தில் கொண்டு காணொலிக்காட்சி மூலம் கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்துள்ளேன் என கூறினார்.

’’கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமாக அறிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தீரன் சின்னமலை பெயரைச் சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருகிறது. திருப்பூரில் திமுக ஆட்சிக் காலத்தில்தான் 2 மகளிர் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பெண்கள் உயர் கல்வி கற்க வேண்டும். அதற்காகவே உயர் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில், திரும்பிய பக்கமெல்லாம் கல்லூரிகள் உள்ளதால், வீட்டிற்கொரு பட்டதாரி உள்ளனர். தமிழ்நாடு மாணவர்கள் உலகெங்கும் சென்று சாதிக்க வேண்டும்’’

இவ்வாறு கூறினார்.