‘சேலம: தி.மு.க ஒரு கார்ப்பரேட் கம்பெனி என விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாரிசு அரசியலுக்கு  முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். மேலும், தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லா சூழல் நிலவுகிறது என்றும் கூறினார்.

திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை என  குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி ,  அ.திமு.க தான் உண்மையான கட்சி. வரும் தேர்தலுடன் தி.மு.க. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.

சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, லஞ்சம் வாங்குவது, கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது, மக்களை சுரண்டுவதில் தி.மு.க ஆட்சி சிறந்தது. நாட்டு மக்களுக்கு திட்டங்கள் போடுவதில், மக்கள் நலன் பெறுவதில் அதிமுகவின் ஆட்சி சிறந்தது சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை. ஒட்டுமொத்தமாக நாட்டு மக்களுக்கே பாதுகாப்பு இல்லை  என்று தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்ததோடு, தி.மு.க ஒரு கார்ப்பரேட் கம்பெனி  என்றும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 சட்டமன்றத் தேர்தல் இருக்கும் என்று தெரிவித்ததுடன், இந்த தேர்தலில்  அ.தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று உறுதிப்படத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மக்களை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலைப்படாமல் இருக்கிறார். பொது மக்களை பற்றி கவலைப்பட்டிருந்தால் தமிழ்நாட்டிற்கு டிஜிபி நியமனம் செய்திருப்பார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என முதலமைச்சர் நினைத்தால் உடனடியாக டிஜிபியை நியமனம் செய்ய வேண்டும்.தமிழ்நாட்டிற்கு டிஜிபி நியமனம் செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன கஷ்டம்?

மேலும், திருத்தணியில் வடமாநிலத் தொழிலாளர் சூரஜ் தாக்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாததால் இளைஞர்கள் சீரழிந்து வருவதாகவும், தமிழ்நாட்டில் சிறுமிகள், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் வேதனை தெரிவித்தார்.

தி.மு.க ஒரு அரசியல் கட்சியே அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று சாடிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க குடும்பம்தான் கட்சி, கட்சி தான் குடும்பம் என்ற நிலை உள்ளது. மூத்த நிர்வாகியான துரைமுருகன் பல காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும், அவருக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. கருணாநிதி குடும்பத்தில் பிறக்காததே அதற்கு காரணம். தி.மு.கவிற்காக எந்த உழைப்பும் போடாத உதயநிதிக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 2026 தேர்தல் இந்த வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும் என்றார்.

திட்டங்களை நிறைவேற்ற நிதி இல்லை என முதலமைச்சர் கூறிக்கொண்டே, மறுபுறம் கார் பந்தயம் நடத்துவதற்கும், கடலில் பேனா சிலை வைப்பதற்கும் தேவையற்ற முறையில் நிதியைச் செலவிடுவதாகக் குற்றம் சாட்டினார். லஞ்சம், ஊழல், கொள்ளையடிப்பதில் மட்டுமே தி.மு.க ஆட்சி சிறந்து விளங்குவதாக அவர் விமர்சித்தார்.

தி.மு.க அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று குறிப்பிட்ட இ.பி.எஸ், 100 நாள் வேலைத் திட்டத்தில் முறையாக சம்பளம் கூட வழங்க முடியாத கையாலாகாத அரசாக தி.மு.க உள்ளது. அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு வேலை நாட்களை 125 ஆக உயர்த்தியது. ஆனால், தி.மு.க தனது வாக்குறுதிப்படி வேலை நாட்களை உயர்த்தவில்லை என்றார்.

சேலம் மாவட்டம் எப்போதும் அ.திமு.க.வின் கோட்டை என்று குறிப்பிட்ட அவர், அ.தி.மு.க. எப்படிப்பட்ட வலுவான கூட்டணியை அமைக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். தி.மு.க மீண்டும் ஆட்சியமைக்கும் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று சூளுரைத்தார்.

திமுக கார்ப்பரேட் கம்பெனியா? அடிமை கம்பெனி எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி…

[youtube-feed feed=1]