சென்னை: இந்தியாவின் முதல்முறையாக, #குறைக்கடத்தி (Semiconductor) உற்பத்தி உபகரணங்களை தமிழ்நாடு ஏற்றுமதி செய்துள்ளதாக தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்து உள்ளார். அது தொடர்பான புகைப்படத்தையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர் ஏற்றுமதி செய்திருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
இந்தியாவே தற்போது செமிகண்டக்டர் உற்பத்தியில் தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சென்னையை சுற்றியே 10க்கும் மேற்பட்ட செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக செமிகண்டக்டர் உற்பத்திக்கு தேவையான உபகரணம் கோவையில் அமைந்துள்ள அமெரிக்க நிறுவனத்தைச் சேர்ந்த ஆலையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மீண்டும் ஒரு அருமையான செய்தி. இந்தியாவிலேயே முதல் முறையாக செமிகண்டக்டர் உற்பத்திக் கருவியை தமிழ்நாடு வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளது. இதற்காக தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் துறை கடந்து வந்த பாதை என்பது நோக்கியா, ஃபாக்ஸ்கான் ஆலைகளில் தொடங்கி இன்று இந்தியாவின் முதல் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியாளராக மாறியிருப்பது நெடிய பயணம்!.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் செமிகண்டக்டர் துறையில் வலுவான கொள்கை கட்டமைப்புடன் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உபகரணத்தை கோயம்புத்தூரிலிருந்து ஏற்றுமதி செய்திருப்பதைக் கொண்டாடுகிறோம். இதனைத் தயாரித்த YES எனப்படும் Yield Engineering Systems நிறுவனத்திற்கு நன்றி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மேற்கொண்ட அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின்போது, இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. கோயம்புத்தூரில் உள்ள YES நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் வணிக VeroTherm Formic Acid Reflow கருவி, ஒரு முன்னணி உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, உங்களுக்கும், கோவை மக்களுக்குப் பெருமை. 2025 தமிழ்நாடு பட்ஜெட்டில் புதிதாக ரூ. 500 கோடி செமிகண்டக்டர் துறைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை உலகளாவிய செமிகண்டக்டர் மையமாக மாறப்போகிறது”
இவ்வாறு டி.ஆர்.பி. ராஜா குறிப்பிட்டுள்ளார்.