சென்னை: இந்தியா பிபிஓ(BPO) மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மத்திய அரசிடம் 10,000 இடங்களைக் கேட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
இந்தியா பிபிஓ மேம்பாட்டு திட்டம், கிராமப்புற தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டுமென்ற தமிழக அரசின் நோக்கத்திற்கு ஒத்திருப்பதால், இத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டிற்கு 10,000 வேலைவாய்ப்புகளை ஒதுக்கிட வேண்டும் என்று கேட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
இதுதொடர்பாக, மத்திய ஐடி துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர்.
“இத்திட்டம் தமிழகத்தில் வெற்றிகரமான ஒன்றாக செயல்பட்டு வருகிறது. சென்னைப் பிராந்திய கட்டுப்பாட்டில் மட்டும் இத்திட்டத்தின் கீழ், 7705 பணி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம், நேரடியாக 8,387 பேரும், மறைமுகமாக 16,774 பேரும் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் இத்திட்டத்தின் வெற்றி 93% ஆகும். இதன்மூலம், தமிழகத்தின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 51 ஐபிபிஎஸ் யூனிட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த வெற்றியின் காரணமாகவே, இத்திட்டத்தின்கீழ், இந்த மாநிலத்திற்கு மொத்தம் 10,000 இடங்களை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர்.