சென்னை:
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரானவுடன், சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சுகாதார பணியாளர்களின் புள்ளிவிவரங்களை தமிழக அரசு சேகரிக்க தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள 2,500 அரசு சுகாதார மையங்களுக்கும், 25,000 தனியார் சுகாதார மையங்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக பொது சுகாதார இயக்குனர் டாக்டர் டிஎஸ் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி மேலும் தெரிவித்த பொது சுகாதார இயக்குனர் டிஎஸ் செல்வவிநாயகம்: மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் விபரங்களையும் வழங்கக்கோரி அனைத்து சுகாதார மையங்களையும் நாங்கள் கேட்டுள்ளோம், விரைவில் இந்த செயல்முறை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி வெளிவரும்போது சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், இதைப் பற்றிய அனைத்து தகவல்களும் வந்தவுடன் அது மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி ஆஸ்ட்ராஜெனிகா மற்றும் இந்திய தடுப்பூசியான கோவிஷில்டின் இரண்டாம் கட்ட சோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன, விரைவில் இதன் மூன்றாம் கட்ட சோதனைகள் தொடங்க உள்ளது.

சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட பிறகு, காவல்துறை, ஐசிடிஎஸ் தொழிலாளர்கள் மற்றும் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு அடுத்தடுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், தடுப்பூசி இன்னும் தயாராகவில்லை என்றாலும் புள்ளிவிவரங்களை இப்போதே சேமித்து வைப்பது பிற்காலத்தில் மாநிலத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் டிஎஸ் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.