தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அவர் இலாகா இல்லாத மந்திரியாக தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரை இல்லாமல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் தன்னிச்சையாக வெளியேற்றி இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக-வின் சுவடே இல்லாத மாநிலங்களில் அதன் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து தடம் பதிக்க புறவாசல் வழியாக பல்வேறு முயற்சிகளில் இறங்குவதை மேற்கு வங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் பாஜக செய்துவரும் அரசியலில் இருந்து உணரமுடியும்.
அந்த வகையில் 2024 பொது தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ளதால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாரத்தைக் காட்டி அதிக இடங்களை பெற ராஜ் பவன் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் அரசியல் பேரம் பேசும் இடமாக மாற்றி வருகிறது என்றும் ஆளுநர்கள் பாஜக-வின் செயல்திட்டங்களை நிறைவேற்றுபவர்களாக உள்ளனர் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட முறையே கேள்விக்குறியாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது அவரிடம் விசாரணை நடத்த ஏதுவாக அவரை அமைச்சரவையில் இருந்து மாநில முதல்வரின் பரிந்துரை இல்லாமல் நீக்கி இருப்பதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
அமலாக்கத்துறை கொடுத்த நெருக்கடி காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டு பை பாஸ் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் தேறிவரும் செந்தில் பாலாஜி இன்னும் முழுமையாக தேறுவதற்கும் விசாரணைக்கு ஆஜராவதற்கும் ஓரிரு மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் என்ற நிலையில் ஆளுநரின் இந்த அதிரடி நடவடிக்கை எதை சாதிக்க என்பது கேள்விக்குறியாக உள்ளது.