அரசு பணியில் சேரும் நபர்களின் குணநலன் குறித்து தமிழ்நாடு காவல்துறை மூலம் சரிபார்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் துறை, அரசுத் துறை, மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவை காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு முன், அரசு ஊழியர்களின் செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மேற்கொண்ட செயல்முறைக்கு பதிலாக இந்த புதிய நடவடிக்கை இனி செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சரிபார்ப்பு மூலம் அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் அனைவரின் முழுமையான பின்னணி உறுதிசெய்யப்படும் என்றும் இந்த ஆய்வுகள் மீது மாவட்ட ஆட்சியர் தனது இறுதி மதிப்பாய்வை வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் அரசுத் துறை அதிகாரிகளாக உள்ள பலர் அரசியல் கட்சி நிகழ்வுகளில் வெளிப்படையாக கலந்து கொண்ட நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், மாவட்ட ஆட்சியரின் இறுதி முடிவை அடுத்தே புதிய ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்ற இந்த புதிய நடைமுறையால் அரசுத் துறையில் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.